Tuesday, 27 March 2018

உயரவும் வேண்டும். உயர்த்தவும் வேண்டும்.

தமிழ் நாட்டிலிலுள்ள
ஒரு தென்மாவட்டம்.

இங்குள்ள ஒரு குறிப்பிட்ட
சமுதாய மக்கள்
வணிகத்தில் ஈடுபட்டு
தொடர் வெற்றி பெற்று
வலம் வருபவர்கள்.

தமிழ்நாடு முழுவதிலும்
இவர்களது கடைகள் உண்டு.
குறிப்பாக மளிகைக்கடைகள்.

இவர்களது கடைகளில்
வேலைபார்ப்பவர்கள்
அநேகமாக அவர்களது
உறவினர்களாகத்தான்
இருப்பார்கள்.

ஒரு ஊழியர்
குறிப்பிட்ட கடையில்
வேலைபார்த்துவிட்டு
வேறொரு கடையில் போய்
அதே வேலையில் சேர்வது
என்பது அறவே கிடையாது.

இருக்கும் கடையை
விட்டுவிட்டு சென்றால்
இன்னொரு கடைக்கு
முதலாளியாகத்தான்
செல்வாரே தவிர
ஊழியராகவே வேறு கடைக்கு
ஒரு போதும் செல்லமாட்டார்.

தனியாக கடை போடுவதற்காக
கடையை விட்டு விலகும்போது
தற்போதைய கடை உரிமையாளரே
அந்த ஊழியரை மனதார வாழ்த்தி வழியனுப்பிவைப்பார்.

வேலையாள் தனக்கு வந்துள்ள
ஒரு போட்டியாளர் என்று
கடை உரிமையாளர்
ஒருபோதும் நினைப்பதில்லை.

சில வேளைகளில்
நிதி உதவி கூட செய்வதுண்டு.

சில வேளைகளில்
பன்னிரண்டு மாதங்களுக்கான
குலுக்கல் முறை சீட்டு
ஒன்றை நடத்தச்சொல்வார்கள்.

இரண்டாவது தவணை
சீட்டு நடத்துபவருக்கு
என்ற அடிப்படையில்
அந்த பணம் அவருக்கு
வட்டியின்றி கிடைக்கும்.

அந்த பணத்தை
முதலீடாக  வைத்து கடையை
சிறப்பாக நடத்த
ஆலோசனை கூறுவார்கள்.

அவர்களும் சீட்டுக்கு
சந்தாதாரராகி
தங்களின் நண்பர்களையும்
சந்தாதாரராக்கி
சீட்டினை வெற்றிகரமாக
நடத்திட உதவுவார்கள்.

தனது கடையில் வேலைபார்த்த
ஊழியர் தனது கண் முன்னால்
வளர்ந்து உயர்வதை கண்ணாரக்
கண்டு மகிழ்வார்கள்.

புதிய கடைவைத்து
நன்கு வளரவேண்டும்
என்ற ஆசை வைத்த
ஊழியரின் உயர்ந்த நோக்கம்
பாராட்டுக்குரியது.

கடை உரிமையாளரின்
உதவியாளரை வாழ்த்தும்
பண்பு பாராட்டுக்கும்
போற்றுதலுக்கும் உரியது.

சில தையற்கலைஞர்களும்
தங்களது ஊழியர்கள்
தனிக்கடை போடும்போது
வாழ்த்தி மகிழ்ந்ததை
கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

இஞ்ச் டேப் ஒன்றையும்
கத்தரிக்கோல்ல் ஒன்றையும்
பரிசாக வழங்குவதை
நான் கண்டிருக்கிறேன்.

நமது அலுவலகத்திலும்
இந்த மாதிரி  முகவர்களை
உயர்த்தி மகிழும்
வளர்ச்சி அலுவலர்கள்
பலர் உண்டு.

பல வளர்ச்சி அலுவலர்கள்
தங்களது முகவர்களை
நன்றாக வளர்த்து
வளர்ச்சியதிகாரிகளாக
உயர்த்தி ப்பார்த்து
மகிழ்ந்திருக்கின்றனர்.

பரமத்தி வேலூரில்
வெற்றிகரமாக பணியாற்றிய
வளர்ச்சி அலுவலர்
திரு லோகநாதன் அண்ணாச்சி.

அவரது அணியைச்சேர்ந்த
ஏழெட்டு முகவர்களை
வளர்ச்சி அலுவலராக உயர்த்தி
அழகுபார்த்து மகிழ்ந்தவர்.

இவரது அணியைச்சேர்ந்த
திரு சங்கர் அவர்கள் இன்று
கோவைக்கோட்டத்தில்
கோட்ட மேலாளர் நிலையில்
ஒரு முதன்மை மேலாளர்.

தஞ்சையில்
வளர்ச்சிஅலுவலராக இருந்தவர்
திரு சங்கரமூர்த்தி அண்ணாச்சி.

இவரது அணியிலிருந்தும்
ஐந்தாறு முகவர்கள்
வளர்ச்சி அலுவலர்களாக
உயர்ந்து சாதித்திருக்கின்றனர்.

இதைப்பார்த்து ரசித்து
மகிழ்ந்தவர் தான் அண்ணாச்சி.

திருநெல்வேலி கிளையின்
வளர்ச்சி அலுவலராக இருப்பவர்
திரு ஜாண்சன் ஜீவதாஸ்.

இவரது புகழ் அணியில்
திரு செல்வின்பால்ராஜ்
என்ற ஒரு முகவர்.

அவர் 1992 ல்
வளர்ச்சி அலுவலராக உயர்ந்து
தற்போது தன்னுடைய
வளர்ச்சி அலுவலரையும்
வணிகத்தில் முந்தி
நெல்லைக்கோட்டத்தின்
முன்னணி வளர்ச்சி அலுவலராக
கொடி கட்டி பறக்கிறார்.

திரு செல்வின் அவர்களின்
வெற்றியை தனது வெற்றியாக
நினைத்து மகிழ்கிறார்
திரு ஜாண்சன் அவர்கள்.

வளர்ச்சி அலுவலர் தேர்வு
சட்டதிட்டங்கள் இப்போது
மாற்றப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களால்
வளர்ச்சி அலுவலர்களுக்கு
தங்களது முகவர்களை
வளர்ச்சி அலுவலர்களாக
உயர்த்த முடியாத நிலைமை.

தான் உயர்வதும் 
தன்னுடனிருப்பவர்களை
உயர்த்துவதும்
போற்றுதலுக்குரியவை.

தன்னால் வளர்க்கப்பட்டவர்கள்
உழைத்து உயர்வதை
பார்த்து மகிழ்வது
உண்மையிலேயே
பெருமிதம் தான்.
பெரிய பேரானந்தம்தான்.

No comments:

Post a Comment