Monday, 5 March 2018

குழம்பாதே....குழப்பாதே

திருச்செந்தூரில்
புதியதொரு கிளை 1981ல்
துவங்கப்பட்டபோது
நான் அங்கு உதவியாளர்.

அந்த ஊரிலேயே
வீடுவாடைக்கு அமர்த்தி
குடும்பத்துடன்
வசித்து வந்தேன்.

1983 ம் வருடம்
சபரி மலைக்கு
செல்வதற்காக
மாலைபோட்டு
விரதம் இருந்து வந்தேன்.

நீல நிறத்தில் வேட்டி
கட்டுவது வழக்கம்.

ஒருநாள்
மேல மாடவீதியில்
சைக்கிளில்
போய்க்கொண்டிருந்தேன்.

தெரு நாய் ஒன்று
என்னை விரட்டிவந்து
வலது பாதத்தை
கவ்விப்பிடித்தது.

கால் பாதத்தோடு
பெடலும் சேர்ந்து
அதன் வாயில்
சிக்கியதால் நாய்
இன்னும் அழுத்தமாக
கடித்தது.

காலை வேகமாக
உதறிவிட்டு  வீட்டிற்கு
விரைந்து வந்துவிட்டேன்.

வெற்றிலை அது இது என்று
சாப்பிட்டுவிட்டு மறுநாள்
அரசுமருத்துவமனை சென்றேன்.

அந்த நாய்
நோயால் பாதிக்கப்பட்ட நாயா
என்பதை அறிந்து கொள்ள
நாய் உயிருடன் உள்ளதா
என்று கேட்டனர்.

என்னைப்போலவே
வேறு இருவரையும்
அந்த நாய் கடித்திருந்த்தால்
தெருக்காரர்கள்
எல்லாம் சேர்த்து அந்த நாயை
அடித்துக்கொன்று விட்டனர்
என்றோம்..

எனவே ஊசி போட
முடிவு செய்யப்பட்டது.

அங்கு மருந்தாளுநராக
பணியில் இருத்தவர்
என் இனிய நண்பர்
திரு அந்தோணி சார்.

கன்னியாகுமரியில்
இப்போது பணிபுரியும்
வளர்ச்சி அலுவலர்
திரு பீட்டர் இருதயராஜ்
அவர்களின் தந்தை.

அவரது ஏற்பாட்டில்
தொப்புளைச்சுற்றி
ஏழு நாட்கள்
ஊசிபோட்டு வந்தேன்.

ஊசி குத்தும்போது
அதிகமாக வலித்தாலும்
அந்த இடம் நன்றாக
கன்னிப்போயிருந்தது.

கன்னிப்போயிருந்த
அந்த இடத்தை
தடவிக்கொடுக்கும்போது
நல்ல சுகமாக இருந்தது.

என்னைப் பார்க்க வருபவர்கள்
ஒவ்வொருவரும்
ஒரு வைத்தியத்தை
பரிந்துரைத்தனர்.

சிலர் அசைவ உணவு
சாப்பிடக்கூடாது
என்பார்கள்.

நான் முழுச்சைவம்
என்பேன்.

அப்படியானால் நல்லது
என்பார்கள்.

தாளித்த உணவை
சாப்பிடக்கூடாது
என்பார்கள்.

எனவே சாம்பார் போன்ற
உணவு வகைகளைத்தவிர்த்து
பருப்புப்பொடியிலும்
பொறிகடலைப்பொடியிலும்
காலம் தள்ளி வந்தேன்.

பிணம் எரியும்போது
வரும் புகையை
உள்ளிழுக்கக் கூடாது
என்றனர்.

அதையும்
ஏற்றுக்கொண்டேன்.

ஒருவர் சாத்தான்குளம்
பக்கத்தில் உள்ள
பேய்க்குளம் என்ற ஊரில்
ஒருவர் விஷக்கடி பார்வை
பார்க்கிறார்.

அவரைபோய் பார்த்தால்
நல்லது என்பார்கள்.

அதிகாலை எழுந்து
அங்கும் சென்று வந்தேன்.

இன்னொருவர் வந்தார்.

நெல்லை சந்திப்பில் உள்ள
செல்வன் சைக்கிள் கடை
முதலாளி நாய் கடித்ததால்
நாய் மாதிரியே குரைத்து
நாசரேத்தில் வைத்து
இறந்துவிட்டார் என்று
பயமுறுத்தினர்.

ஒவ்வொருவரும் ஒரு
வைத்தியத்தை
பரிந்துரைத்தனர்.

டிசம்பர் மாதம் எனக்கு
பதவி உயர்வுக்கான
நேர்காணல் மதுரையில்.

கவனமாக பயணம் சென்று
கலந்து கொண்டேன்.

பதவி உயர்வு கிடைத்தது.

சபரிமலைக்கும் சிரமமின்றி
சென்றுவந்தேன்.

இரண்டாண்டுகள் கழித்து
சபரிமலைக்கு மாலை
போட்டிருந்த நேரம்.

நீலக்கலர் வேட்டியில்
எங்கள் தெருவில்
நடந்து போனபோது
மீண்டும் நாய் கடித்தது.

ஊசி ஏற்கனவே
போடப்பட்டிருப்பதால்
இப்போது ஊசி
வேண்டாம் என்றும்
தலைவலி வந்தால் மட்டும்
உடனே வரச்சொல்லியும்
அனுப்பிவைத்தனர்.

மீண்டும் பருப்புப்பொடி
கலந்த சாப்பாடு.

எண்ணை வைத்து
தாளிக்காத கறிவகைகள்.

இந்த தடவையும்
பதவி உயர்வு போன்ற 
ஏற்றம் கிடைத்தது.

1985 லேயே
Programmer ஆக தெரிவு
செய்யப்பட்டேன்.

என்னைப் பார்க்க வந்த
ஒவ்வொருவர் சொல்லிய 
ஆலோசனைகளை கேட்டு
நொந்து நூலாகிப் போனேன்.

ஆனால் இதன் மூலம் ஒரு
நல்ல படிப்பினை கிடைத்தது.

பல ஆலோசனைகள்
வழங்கப்பட்டால்
எந்த ஒரு சரியான முடிவையும்
யாராலும் எடுக்க முடியாது.

இதைப்போலத்தான் ....
முகவர்கள் தங்கள்
வாடிக்கையாளர்களிடத்தில்
எல்லாத்திட்டங்களகயும் பற்றி
விளக்கிக்கூறினால்
எந்த திட்டம் தமக்கு
நல்லது என்பது பற்றி
முடிவெடுக்க முடியாமல்
நாய்கடிபட்ட
என்னைப்போல்
குழம்பிப்போவார்.

ஒரு முடிவிற்கும் வர
அவரால் இயலாது.

அவரது தேவைக்கேற்ற
திட்டங்களைப்பற்றி மட்டும்
விளக்கமாக எடுத்துக்கூறி
அவரை சம்மதிக்க
வைக்க வேண்டும்.

நாமும்
குழம்பக்கூடாது...

வாய்ப்பாளரையும்
குழப்பக்கூடாது..

No comments:

Post a Comment