ஒரு_பூட்டு_பல_சாவி
திருப்பூரில் நான்
கிளை மேலாளராக
இருந்தபோது படித்த
ஒரு நல்ல பாடம்.
நானும், ராஜகுமாரன் என்ற
உதவிக்கிளைமேலாளரும்
எந்தவொரு முகவரும்
"வணிகப்பற்றாக்குறை"
என்ற காரணத்திற்காக
நீக்கப்பட்டுவிடக்கூடாது
என்பதில் உறுதியாக
இருந்தோம்.
கைபேசி வசதியெல்லாம்
அப்போது இல்லை.
தேவைப்படும் வணிக அளவை
குறிப்பிட்டு அந்த முவர்களுக்கு
பத்தாவது மாத முடிவில்
ஒரு நினைவூட்டுக் கடிதம்.
பதினொன்றாவது மாத
முடிவில் இன்னொரு கடிதம்.
பன்னிரண்டாவது மாதத்தில்
பத்துநாட்களுக்கு ஒருமுறை
மற்றுமொரு கடிதம்.
இப்படியெல்லாம்
பற் பல நடவடிக்கைகள்.
கடந்த காலத்தில்
நல்ல வணிகம் புரிந்து
இப்போது வணிகம்
ஏதும் கொடுக்காதவர்களை
பிரித்துப்பார்த்து பட்டியலிட்டு
நேரில் சென்று அவர்களை
சந்திப்போம். விவாதிப்போம்..
முகவர் பணியினைத்
தொடர்ந்திட வேண்டி
அறிவுறுத்துவோம்.
உதவுவதற்கு நாங்கள் தயார்
என்பதை உணர்த்துவோம்.
நல்ல பலன் இருந்தது.
ஒரு வளர்ச்சி அலுவலர்.
திரு கணபதி அண்ணன்.
இந்த பாசமிகு
திருச்செங்கோட்டுக்காரரை
இப்படித்தான் அண்ணன்
என்று அடைமொழி
சேர்த்து அழைப்பேன்.
இந்த நடவடிக்கைகளை
எடுக்கத்தொடங்கியது
பயன் தருகிறது என்று
நினைத்து மகிழ்ந்தபோது
கணபதி அண்ணன்
அலறியடித்து
என்னிடம் வந்தார்.
"சார். .....
உங்களுக்கு
என் அணி முகவர்
முகவராக இந்த ஆண்டும்
தொடரவேண்டும்
என்பது தானே நோக்கம்.
எனது உறுதியான
நோக்கமும் அதுவே தான்.
எனது அணி மாறுபட்ட
சிறப்பானதொரு அணி.
எனது அணி முகவர்களில்
பலர் தணிக்கையாளர்கள்.
தணிக்கைத் தொழிலை
மிகச் சிறப்பாகவும்
வெற்றிகரமாகவும்
நடத்தி வருபவர்கள்.
அவர்கள் எப்போதுமே
மாதக்கடைசியில் தான்
புது வணிகம் தருவார்கள்.
அவர்களை தக்கவைப்பதை
என் பொறுப்பில் விட்டு
அதனை மறந்து விடுங்கள்.
தேவையானதை நான்
பார்த்துக்கொள்கிறேன்.
உங்களது கடிதத்தில்
அவர் ஆண்டு முழுமைக்கும்
புரிய வேண்டிய
குறைந்த பட்சவணிகத்தை
மட்டுமே தெரிவிக்கிறீர்கள்.
எதிர்பார்ப்பாக பெரிய
வணிக இலக்கினை
கொடுப்பதில்லை.
அதனால் அவர்கள்
குறைந்தபட்ச வணிகத்தையே
குறிவைப்பார்கள்.
ஆனால் நான்
அவர்களிடம் மிகப்பெரிய
வணிக அளவை
கட்டாய இலக்காக
தெரிவித்துள்ளேன்.
நான் அவர்களிடம்
இந்த வருடமும் அவர்கள்
முகவர் பணியை
வெற்றிகரமாகக்
கடக்க வேண்டும்.
அப்போதுதான்
முந்தைய வருடங்களின்
வணிகத்திற்கான
தொடர் கமிஷன்
இனி வரும் காலங்களில்
அவர்களுக்கு
உறுதியாகக் கிடைக்கும்.
இல்லையென்றால்
ஒன்றும் கிடைக்காது என்றும்
அவர்களிடம் தெளிவாக
சொல்லிவைத்திருக்கிறேன்.
நீங்கள் இடைவிடாது
அனுப்பும் கடிதம் எனது
நடவடிக்கையை முற்றிலும்
கெடுத்துவிடும்.
எனவே எனது அணி
முகவர்களுக்கு நீங்கள்
நினைவூட்டல் கடிதம்
எழுத வேண்டாம்" என
ஓர் அன்பு வேண்டுகோளை
என் முன் வைத்தார்.
நானும் மகிழ்ச்சியுடன்
ஒப்புக்கொண்டேன்.
இந்த வகை
முகவர்கள் மூலம்
அவர் கூறியிருந்த
சிறப்பான பெருவணிகத்தை
பெற்றுத்தந்து எங்களை
மனம் குளிரச்செய்தார்.
ஒரு தேவைக்குத்தான்.....
அப்பப்பா ........
எத்தனை பார்வைகள்..
எத்தனை கோணங்கள்...
எத்தனை அணுகுமுறைகள்...
ஒன்றைவிட ஒன்று
சிறந்ததாக அல்லவா
இருக்கிறது..
கணபதி அண்ணனைப்போல்
பல் வேறு பிரச்சினைகளுக்கு
சிறப்பான உத்தி களை
கடைப்பிடித்து வரும்
வளர்ச்சி அலுவலர்கள்
ஏராளமாய் உள்ளதை
பல் வேறு நேரங்களில்
கண்டு வியந்திருக்கிறேன்.
பூட்டு என்னவோ ஒன்று தான்...
ஆனாலும் பூட்டைத்திறக்க
சாவிகள் பலப்பல..
No comments:
Post a Comment