Monday, 5 March 2018

வெட்டிச் செலவல்ல..வெற்றிக்கான முதல்

எந்த தொழிலிலுமே
"செலவைக்குறைப்போம்
முதலீட்டைப்பெருக்குவோம்"
என்ற வாசகத்தின்
அடிப்படையில் தான்
செயல்படுவார்கள்.

எனது முகவ நண்பர்களில்
ஒரு சிலர்....

இந்த வாசகங்களின்
முதல் பகுதியை
கெட்டியாக பிடித்துக்
கொள்வார்கள்..

இரண்டாவது பகுதியை
வசதியாக மறந்துவிடுவார்கள்.

ஒரு_மூத்தமுகவர்....

ஒரு நாள் நான் அவரிடம்
"அண்ணாச்சி ..
உங்களது வாடிக்கையாளர்
எண்ணிக்கை
ஆயிரத்தை தாண்டிவிட்டது.

பாலிசிதாரர்களை
நினைவூட்டுவது,
பணம் செலுத்தவைப்பது,
பாலிசியை புதுப்பிப்பது,
உரிமப் பணம் வாங்கிக்கொடுப்பது
என்று தேவைப்படும் சேவைகளை
உங்களால் சரிவரச்செய்ய இயலாது.

புதுவணிகச்சேர்க்கைக்கு
நேரம் குறைவாகவே கிடைக்கும்.

எனவே ஒரு அலுவலகம் துவக்கி
ஒரு நபரை பணியமர்த்துங்கள்.

நன்றாக இருக்கும்.

வணிகமும் பெருகும்.
வருமானமும் உயரும்"
என்றேன்.

அலுவலகம் துவக்குவதையும்,
பணியாளை நியமிப்பதையும்
அநாவசியச் செலவாக நினைத்த
அவர் என்னைப்பார்த்து
"அண்ணாச்சி...
நான் ஒரு ஆளை
வேலைக்கு வைத்து
பயிற்சி கொடுப்பேன்.
என் வாடிக்கையாளர்களை
அறிமுகப்படுத்தி வைப்பேன்.

ஆறு மாதம் கழித்து
உங்கள் அலுவலகத்திலிருந்து
அந்த நபரை ஒரு முகவராக
நியமித்து விடுவீர்கள்.

அவர் எனக்கு
போட்டியாளராக
மாறிவிடுவார்.

என் விரலை வைத்தே
என் கண்ணைக்குத்தவைக்க
ஆலோசனை சொல்கிறீர்களே"
என்று பதில் கூறினார்.

அவரது வார்த்தைகளில்
சிறிது உண்மையிருந்தாலும்
அவரது உள் எண்ணம் என்னவோ
இது ஒரு தேவையற்ற
செலவு என்று நினைத்ததுதான்.

இன்னொருவர்...

வாடிக்கையாளரிடம்
பணம் வாங்கிவந்து
அலுவலகத்தில் அதை
செலுத்திவிட்டு
ரசீதை நேரில் கொண்டு போய்
கொடுக்கமாட்டார்.

பெட்ரோல் செலவாகுமாம்.

அலுவலக தபாலில்
சேர்த்து விடுவார்.

இல்லையென்றால்
ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் வாங்கினால்
செலவு என்று நினைத்து
ஸ்டாம்ப் ஒட்டாமலேயே
தபால் பெட்டியில் போடுவார்.

"ஏன் தம்பி இப்படி"
என்று கேட்டால்
"ஸ்டாம்ப் ஒட்டாமல் போட்டால்
பதிவுத்தபால் மாதிரி
தவறாமல் சென்றுவிடும்"
என்று விளக்கம் வேறு கொடுப்பார்.

இதை செலவு என்று கருதினால்
அந்த வாடிக்கையாளர்
புது வணிகத்தை
இந்த முகவருக்கா கொடுப்பார்.

இன்னொருவர்...

சமீபத்தில் அலுவலகம் தொடங்க
ஐயாயிரம் சம்பளத்தில் ஒரு நபரை பணியமர்த்தினார்.

நான் கூட அவரிடம்
"பெட்ரோல் விற்பனைமையங்களில் கூட
மாதச்சம்பளம் எட்டாயிரத்திற்கு
பணியாளர்கள் தேவை என்று
விளம்பர அட்டை வைத்துள்ளார்கள்.

நீங்கள் அந்த அளவிற்காவது
கொடுத்தால்தானே தகுதியான
நேர்மையான நபர்கள்
வேலைக்குக்கிடைப்பார்கள்"
என்றெல்லாம் கூறினாலும்
அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது என்ன தேவையற்ற
ஒரு செலவா?

#இன்னொருவர்..

பயிற்சி மையங்களில்
பணம் செலுத்தி
பயிற்சி பெறுவது
வீண் செலவு என்பார்.

தாழ்வு மனப்பான்மையால்
நம் நிறுவனம்
பல்வேறு பயிற்சி மையங்களில்
இலவசமாக  வழங்கிவரும்
பயிற்சி வகுப்புகளுக்கும்
செல்லமாட்டார்.

வணிக வளர்ச்சிக்கு
தேவைப்படும் செலவினங்கள்
வீண் செலவேயில்லை.
அத்தனையும்
நல்ல வருவாயை உறுதிசெய்யும்
பயனுள்ள முதலீடுகள்.

இதை உணர்ந்தால்
வானமே வசப்படும்

No comments:

Post a Comment