Tuesday, 13 March 2018

ஆல் இன் ஆல் அழகுராஜா

தமிழ் நாட்டில் ஓட்டுநர் உரிமம்
வாங்குவது மிகவும் எளிது.

பயிற்சி உரிமமானாலும் சரி..
பக்கா உரிமமானாலும் சரி..
இரண்டு சக்கரவாகனமாலும் சரி..
நான்குசக்கர
இலகு வாகனமானாலும் சரி..
கனரகவாகனமாலும் சரி..
ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு
கலர் நோட்டு கொடுத்தால்
வேலை வெற்றிகரமாக
முடிந்துவிடும்.

நோட்டு கொடுத்தால்
ஓட்டுநர் உரிமம் நம் கைகளில்.

2000 த்தில் தஞ்சாவூரில்
என் புதல்வருக்கு
இரண்டுசக்கர வாகனத்திற்கு
ஓட்டுநர் உரிமம் வாங்கும்வேளையில்
வேறு யாரோ நோட்டு கொடுத்து
நான்கு சக்கர வாகனத்திற்கு
உரிமம் வாங்க
ஏற்பாடு செய்திருக்கிறார்.

புகைப்படம் எடுக்கும்போது
தவறாக புரிந்து கொண்டு
என் புதல்வரின் உரிமத்தின்
இரண்டு சக்கர வாகனத்தோடு
நான்கு சக்கர வாகனத்தையும்
சேர்த்து அனுமதி வழங்கிவிட்டனர்.

சிலநாட்களுக்கு பிறகுதான்
உரிமம் கைக்கு வந்தது.
அப்போதுதான் பிழை பற்றி
தெரியவந்தது.

இடைத்தரகரிடம் தெரிவித்தேன்.
புதல்வருக்கு கார் ஓட்ட தெரியுமா
என்று கேட்டார்.
தெரியும் என்று சொன்னதும்
அப்படியே விட்டுவிடச் சொன்னார்.
ஏனென்றால் பிழையை சரிசெய்ய
இன்னும் செலவாகும் என்றார்.

உரிமம் வழங்க
ஓட்டிக்காட்டவும் சொல்லவில்லை.
சாலை விதிகள் பற்றி எந்த கேள்வியும்
கேட்கவுமில்லை.

இதுதான் இங்குள்ள
லட்சணம்.

நான் ஓட்டுநர் உரிமம் பெற்றது
1990 ல் கேரளத்தில்.

ஓட்டியும் காட்டினேன்.
கேட்டகேள்விக்கு பதிலும்
சரியாகச்சொன்னேன்.

சாலைகளில் பயணம் செய்யும்போது
சாலையின் நடுவில்
நெடிய வெள்ளைக் கோடுகள்
பெயிண்டால்
போடப்பட்டு இருக்கும்.

சில இடங்களில் கொஞ்சம்
இடைவெளிவிட்டு விட்டு
போடப்பட்டிருக்கும்.

சில இடங்களில் இடைவெளி
இல்லாமல் தொடர்ச்சியாக
போடப்பட்டிருக்கும்.

எனக்குத்தெரிந்த
பல ஓட்டுனர்களிடம்
இந்த இரண்டிற்கும்  வேறுபாடு
என்ன என்று கேட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் உரிமம் பெற்றிருந்த
எந்த ஓட்டுநரும்
எனது  இந்த கேள்விக்கு
சரியான பதில் தரவில்லை.

இந்த வெள்ளைக்கோடு பற்றி
ஒவ்வொரு ஓட்டுநரும்
கட்டாயம் தெரிந்து
வைத்திருக்கவேண்டும்.

இதுபற்றி ஓட்டுநர்களும்
தெரிந்து வைக்கவில்லை.

உரிமம் வழங்கியவரும்
விளக்கம் கேட்கபதில்லை.

வேதனைப்படவேண்டிய
கேவல நிலைமை இது.

கோடு இடைவெளிவிட்டு போட்டிருந்தால்,
ஒரு தடத்திலிருந்து
மற்ற தடத்திற்கு தாராளமாக
மாறிக்கொள்ளலாம்.

இடைவெளி இல்லாமல்
கோடு தொடர்ச்சியாக காணப்பட்டால்,
ஒரு தடத்திலிருந்து
அடுத்த தடத்திற்கு
மாறிச் செல்லக்கூடாது.

வண்டியை ஓட்டும் நேரத்தில்,
விளக்குகளை
கையாளவேண்டியமுறை,
ஒலிப்பான்களை
பயன்படுத்த வேண்டிய நேரம், நான்குவழிச்சாலையில்
பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்,
போன்றவற்றைப்பற்றி
நன்கு அறிந்துவைத்திருக்கும்
ஓட்டுநர்களால் விபத்துக்கள்
ஏதுமின்றி சரிவர
வண்டி ஓட்ட முடியும்.

உடன் பயணிப்போர்
மன நிம்மதியுடன்
பயணிக்கலாம்.

இந்த அடிப்படை விதி கூட
தெரியாமல் உரிமம் பெற்றுள்ள
பல ஓட்டுநர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக சொந்த வண்டியை
தானே பயன்படுத்துபவர்கள்
இதை தெரிந்துகொள்ளாமல்
இருக்கின்றனர்.

ஆனாலும் வாகனத்தை நன்றாக
ஓட்டுபவர்களாகத்தான்
இருக்கிறார்கள்.

இருந்தாலும் இந்த விதிகள்
அனைத்தையும் தெளிவாக
தெரிந்திருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.

அனைத்துவிதிகளையும்
தெரிந்துவைத்திருந்து
அதன்படி வண்டி
ஓட்டுபவர்களுக்கு
விதிகள் தெரியாமல்
தாறுமாறாக வண்டி
ஓட்டுபவர்களுக்கிடையில்
வண்டி ஓட்டுவது
கஷ்டமாகவே இருக்கும்.

இதைப்போலத்தான்
நமது முகவர்களில் பலரும்
நல்ல வணிகம் புரிபவர்களாக
சிறந்து விளங்குகிறார்கள்.

ஆனாலும் விதிகள் பற்றி சரியாக
தெரியாத ஓட்டுநர்கள் மாதிரி
வணிகம் புரிந்து வருகின்றனர்.

விற்பனைக்கலை பற்றி,
காப்பீட்டு தேவைபற்றி,
திட்டங்களின் அம்சங்கள்பற்றி,
அண்டர்ரைட்டிங் விதிகள் பற்றி,
சந்தை நிலவரம்பற்றி,
போட்டியாளர்கள் பற்றி,
அவர்களின் பலம் பற்றி,
அவர்களின் திட்டங்கள் பற்றி,
சரியாக பயிற்சி எடுத்துள்ள
இளைய தலைமுறை முகவர்களும்
இன்றைக்கு தேவைப்படும்
இணையதள முகவர்களும்
குறைந்த அளவே உள்ளனர்.

பழையதலைமுறை முகவர்கள்
எல்லாம் தெரிந்த,பயிற்சிபெற்ற,
இளைய & இணைய தலைமுறை
முகவர்களாக மாறவேண்டும்.
மாற்றப்படவேண்டும்.

அனைத்து விதிகளையும்
அறிந்து வைத்திருக்கும்
ஆற்றல் மிக்க ஓட்டுநர்களை
பயணிகள் விரும்புவதுபோல்
நன்கு பயிற்சி பெற்ற விதிகளறிந்த
புதிய தலைமுறை முகவர்களையே
வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள்.

இந்த உண்மைகளை
நன்கு புரிந்துகொண்டு
சிறந்த பயிற்சி எடுத்து
விற்பனைக்கலையிலும்
விதிகளை சரியாக
அறிந்து வைத்திருப்பதிலும்
விற்பன்னர்களாக
விளங்கிடவேண்டும்.

No comments:

Post a Comment