Wednesday, 28 March 2018

நினைப்பதை அறிதல்


ஷேக் முஹம்மது
பின் ரஷீத் அல் மக்தூம்
துபாய் அமீரகத்தின்
இன்றைய மன்னர்.

இவரே ஐக்கிய அரபு அமீரகங்களின்
துணைத்தலைவராகவும் உள்ளார்.

பல வருடங்களுக்கு முன்
துபாய் மாநகரத்தில்
உலக அளவில் உயரமான
கட்டிடம் ஒன்றைக்கட்டிமுடித்து
உலக வரைபடத்தில் துபாய்க்கு
ஒரு உன்னத இடத்தைப்பெற்றுத்தர
பேராசைப்படுகிறார் மன்னர்.

இந்த எண்ணத்தை
தனது தொழில்நுட்பப் பிரிவு
வல்லுனர்களிடம் தெரிவிக்கிறார்.

தொழில் நுட்ப அணியினர்
எண்பது மாடிகள் கொண்ட
ஒரு ஊசிக்கோபுரம்,
அதைச்சுற்றி சிறிய கட்டிடங்கள்,
கவின் மிகு பூங்கா,
பசுமை நிறைந்த புல்வெளிகள்
இவற்றை உள்ளடக்கிய
வரை படத்தை மன்னரின்
பார்வைக்கு வைக்கிறார்கள்.

மன்னர் பார்த்துவிட்டு
கருத்தேதும் கூறாமல்
வரைபடத்தை திருப்பிக்
கொடுத்து விடுகிறார்.

கொடுகப்பட்ட வரைபடத்தை
மன்னர் ரசிக்கவில்லை
என்பதை வல்லுனர் குழு
நன்றாகவே புரிந்து கொள்கிறது.

ஒரு மாத இடைவெளிக்குப்பிறகு
பல மாற்றங்களுடன்
வேறு ஒரு வரைபடத்தை மன்னரின்
பார்வைக்கு வைக்கிறார்கள்.

இதுவும் சிறந்ததல்ல என
மன்னர் நினைக்கிறார்.

பிறகு மன்னர் அவர்களே
வல்லுனர் குழுவிடம்,
“இந்த இடத்தில் இது வரை
மனிதகுலம் கட்டியிருக்காத
மிக உயரமான மிகச்சிறந்த
கட்டிடமாக  அமைக்க வேண்டும்.

அதனைச்சுற்றி மிகச்சிறந்த
சோலையும் நீரூற்றும்
அமைக்கப்படவேண்டும்.

மிகப்பெரிய விடுதிகளும்
மிகச்சிறந்த வணிக வளாகமும
இருத்தல் வேண்டும்.

மொத்தத்தில்  மனித இனம்
இதுவரை பார்த்திராத
குடியிருப்பாகவும் அந்த இடம் இருக்கவேண்டும்.

இதன் அடிப்படையில்
திட்டம் தீட்டுங்கள்"
என்று அழுத்தமாகக்கூறுகிறார்.

இந்த செய்தியை  படித்தபோது
எனது உயர் அலுவலர் ஒருவர்
என் நினைவில் வந்து போனார்.

1998-2002 ல் நான்
தஞ்சைக்கோட்டத்தின்
கணிணித்துறை மேலாளர்.

திரு மணிவண்ணன் சார் அவர்கள்
1998-2000 காலத்தில்
தஞ்சைக் கோட்ட மேலாளர்.

எனது துறை சார்ந்த
சில அலுவலகக் குறிப்புகளை
அவரது ஒப்புதலுக்காக
அனுப்பி வைப்பதுண்டு.

அவ்வாறு அனுப்பப்படும்
குறிப்புகள் பல நேரங்களில்
ஒப்புதல் இல்லாமலும்
குறிப்பேதுமில்லாமலும்
எனக்கே திரும்பி வரும்.

அந்த குறிப்புகள்
முழுமை பெற வில்லை
என்பதை புரிந்து கொண்டு
மாற்றி எழுதி அனுப்பவேண்டும்.

நேரில் சென்றாலும் குறிப்பு
சரியில்லை என்பதை
தனது உடல் மொழி மூலம்
தெரியப்படுத்துவார் .

கடுஞ்சொற்களையும்
பயன்படுத்தமாட்டார்.
கட்டளையும் இடமாட்டார்.

அவரது எதிர்பார்ப்பு
என்னவென்று  நம்மிடம்
நேரடியாகக்கூறாமல்
நாமே அதனை புரிந்து கொண்டு
நம்மை சரியாக செயல்பட வைப்பது
அவரது தனித்துவ பாணி.

அவர் உடல்மொழி மூலம்
தெரிவிக்காமல் நேரடியாக அவரது
கருத்தைச் சொல்லியிருக்கலாம்.

அதற்கேற்றபடி நான் குறிப்பை
மாற்றி எழுதியிருப்பேன்.

அப்படிச் செய்திருந்தால்
என்னுடைய  சிந்தனைத்திறன்
மழுங்கிப் போயிருக்கும்.

என்னுடைய சிந்தனையும்
செயல்கள்களும்
மேம்பட்டிருக்காது.

துபாய் மன்னரிடமும்
மணிவண்ணன் சாரிடமும்
இந்த மிகச் சிறந்த
மேலாண்மைக்குணத்தை
உணர்ந்து மகிழ்கிறேன்.

இவை நாம் அனைவருமே
கற்றுக்கொள்ள வேண்டிய
நல்ல படிப்பினைகள்.

No comments:

Post a Comment