நான் 1992-94 காலகட்டத்தில்
திருச்செந்தூர் கிளையில்
கிளை மேலாளராக
இருந்த நேரம்.
ஆறுமுகநேரி சாகுபுரத்தில்
உள்ள DCW நிறுவனத்தில்
அலுவலகப் பணியாற்றிய
திரு பரமசிவன் என்ற நண்பர்
எல்ஐசி முகவராகவும்
சிறப்பாக பணியாற்றி வந்தார்.
அந்த காலகட்டத்தில்
DCW போன்ற நிறுவனங்களில்
சம்பள சேமிப்புத்திட்டத்தில்
பாலிசி வழங்குவது பிரபலம்.
சம்பளத்திலேயே
தவணைத்தொகை
பிடித்தம் செய்யப்படுவதால்
பாலிசி காலம் முழுமையும்
பாலிசி அமுலில் இருக்கும்.
இந்த திட்டம்
வாடிக்கையாளருக்கும்,
எல்ஐசி நிறுவனத்திற்கும்
முகவருக்கும்,
பலன்தரக்கூடியது.
எனவே இந்தத்திட்டத்தில்
பாலிசி வழங்க முகவர்கள்
ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த திட்டத்தின் மூலம்
பாலிசி எடுத்தால் அலுவலத்தில்
இரண்டு மாதத் தவணைகளை
முன்பணமாக செலுத்தவேண்டும்.
கடும் போட்டி காரணமாக
பல நேரங்களில்
பல முகவர்கள் இந்த
இரண்டு தவணைகளைஅவர்களே
கையிலிருந்து பணத்தை
செலுத்திவிடுவார்கள்..
மேலும் சிலர்
இன்னொரு தவணையை
வாடிக்கையாளரிடம்
வழங்கி விடுவார்கள்.
மேற்குறிப்பிட்ட திரு.பரமசிவன்
இந்த திட்டத்தில் இந்தமுறையில்
சிற்பாக வணிகம்
புரிந்துகொண்டிருந்தார்.
எல்.ஐ.சி.நிறுவனத்தில் வேறு
எந்த நிறுவனத்திலும் இல்லாத
சிறப்பு ஒன்று உண்டு.
முகவர்கள்
வாடிக்கையாளர்களுக்கு
புத்தாண்டுப் பரிசளிக்க
எல்ஐசி நிறுவனமே
மானியவிலையில்
நாட்குறிப்பும் நாட்காட்டியும்
தயாரித்து வழங்கும்.
என் நண்பர் திரு.பரமசிவன்
எங்கள் அலுவலகத்தில்
பணம் செலுத்தி அவற்றை வாங்கி
வாடிக்கையாளர்களுக்கு
புத்தாண்டுப்பரிசாக
வழங்கி மகிழ்வார்.
அவரது அனைத்து
வாடிக்கையாளர்களுக்கும்
வழங்க மாட்டார்.
நாட்காட்டியோ, நாட்குறிப்போ
பரிசாக கிடைக்கப்பெறாத
வாடிக்கையாளர்கள்
திரு.பரமசிவனிடம்
ஏன் தரவில்லை என்று
கேட்பார்கள்.
அவர்களுக்கு முகவர்
திரு பரமசிவன் அளிக்கும்
நறுக் பதில் இருக்கிறதே..
அது பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட வேண்டிய
ஒரு வாழ்க்கை நெறி..
திரு பரமசிவன் கூறிய பதிலை
அவரது வார்தைகளிலேயே
இங்கு தருகிறேன்.
" ஏல...
நீ என்னைக்கி ஏங்கிட்ட
ரெண்டு பிரிமியத்துக்கு
ஒன்னோட பாலிசியை
வித்தியோ அப்பவே
ஒனக்கும் எனக்கும்
உள்ள டீல் முடிஞ்சுபோச்சு.
டைரி காலண்டர் கேக்க
ஒனக்கு எந்தவிதமான
தார்மீக உரிமையும்
கெடையாது.
நீ மட்டும் ரெண்டு பிரிமியத்தை
என்னைய கட்டச்சொல்லாம
பாலிசி சேர்ந்திருந்தா
நான் ஒனக்கு வருடாவருடம்
காலண்டரும் டைரியும்
ஒன்னோட ஆயுசுகாலத்துக்கும்
தந்திட்டே இருப்பேன்.
ஓஞ்சோலிய பாத்துட்டு
போல..மூதேவி.."
படிக்கின்ற பலருக்கும்
பரமசிவன் ஒரு கடைந்தெடுத்த
சுயநலவாதி என்று
நினைக்கத் தோன்றும்.
ஆனால் ...
அவர் கூறியது எவ்வளவு
பொருள் பொதிந்த வார்த்தை ..
முகவர்களுக்கும்
வாடிக்கையாளர்களுக்குமான
உறவு முகவரின் சேவையில்
தான் பலப்படுகிறது.
முகவர் தள்ளுபடி கொடுத்தால்
சட்டப்படி அது பெருங் குற்றம்.
முகவருக்கு செல்ல வேண்டிய
நியாயமான வருவாயை
பங்குபோட்டுக்கொண்டால்
பாலிசிதாரர் முகவரிடமிருந்து
எந்த விதமான சேவையையும்
உரிமையோடு எதிர்பார்க்கமுடியாது.
No comments:
Post a Comment