Tuesday, 13 March 2018

மொட்டையிலும் நியாயம் வேண்டும்

மொட்டைக்கடிதம்
எழுதுவது கூட ஒரு கலை.

எனது நண்பர் ஒருவர்.

ஒரு அலுவலகத்தில் அதிகாரி.

உற்சாக பானப்பிரியர்.

உற்சாகபானம்
உள்ளே சென்றுவிட்டால்
அத்துமீறி பேசுவார் .

உடன் இருப்போரை 
உதாசீனப்படுத்தி திட்டுவார். 

கடன் கொடுத்த நண்பர்கள்
கடனை திருப்பிக்கேட்டால்
தரமுடியாது- முடிந்ததை 
பார்த்துக்கொள் என்பார்.

நண்பர்கள் இருக்கும் பகுதிக்கு
இவர் அலுவலகப்பயணம் 
செல்லவேண்டும்.

பயணத்தின்போது பணம்
கைமாத்து கேட்பார்.

உற்சாக பானம் கேட்பார்.
அநாகரிகமாக திட்டுவார்.

நண்பர்கள்
பொறுத்துப்பார்த்தார்கள்.

பொறுமையும் எல்லை மீறியது.

அனைவரும் ஒன்று கூடுகிறார்கள்.

உயர் அலுவலகத்திற்கு 
ஒரு மொட்டைக்கடிதம் எழுத
முடிவாயிற்று.

என்ன என்ன
குற்றச்சாட்டுக்கள் என 
பட்டியலிடுகிறார்கள்.

மகிழ்ச்சியில்
உற்சாக பானத்தையும்
உள்ளே தள்ளுகிறார்கள்.

கடிதத்தில் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகள்
குறிப்பிடப்படுகின்றன.

அலுவலர்
பயணம் வரும்போது
பணம் கேட்கிறார்.

கொடுக்காவிட்டால்
திட்டுகிறார்.

உற்சாக பானம் வாங்கி 
கொடுக்கவேண்டியுள்ளது.

எனவே இவரை
இடம் மாற்றுவதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
என எழுதுகிறார்கள்.

இந்தநேரத்தில்
வேறு ஊரிலிருந்து 
சங்கத் தலைவர் ஒருவர்
நண்பர்களைப்பார்க்க வருகிறார்.

அவர் மொட்டைக்கடிதத்தை
படித்துப் பார்க்கிறார்.

குற்றச்சாட்டுக்களுக்கு கூடுதல்
வலு சேர்க்க இன்னும் ஒன்றைச்
சேர்க்கலாம் என்று கூறுகிறார்.

ஒவ்வொரு பயணத்தின்போதும்
மதிய உணவிற்கு
கோழிக்கறியும்
ஆட்டுக்கறியும்
கட்டாயம் வேண்டும்
என்று கேட்கிறார்
என்ற வாசகங்களையும்
சேர்க்கிறார்.

கடிதம் பதிவு அஞ்சலில்
அனுப்பப்படுகிறது.

நமது அலுவலரும்
உயர் அதிகாரியும்
நல்ல நண்பர்கள்.

உற்சாக பான
விருந்துகளில் இருவரும்
பங்காளிகள்.

சீட்டு விளையாட்டு,
உற்சாக பானம் அருந்துதல்
போன்ற பழக்கங்கள் இருந்தாலும்
நம்ம அலுவலர் தீவிர
சைவ உணவுக்காரர்.

அசைவ உணவு பக்கம்
போகவே மாட்டார்.

அந்த அளவு உணவில்
கட்டுப்பாடு உள்ளவர்.

இந்த  தகவல்
உயர் அதிகாரிக்கு
நன்றாகவே தெரியும்.

நண்பர்கள் அனுப்பிய
மொட்டைக்கடிதம்
உயர் அதிகாரியின்
கனிவான பார்வைக்கு 
வைக்கப்படுகிறது.

படித்துப்பார்க்கிறார்.

கடைசிக்குற்றச்சாட்டான "கோழிக்கறி ஆட்டுக்கறி" ஐ
படித்தவுடன் அவர்
இக்கடிதம் இட்டுக்கட்டியது
என கருதி கடிதத்தை
கசக்கி எறிகிறார்.

அந்த கடைசி
குற்றச்சாட்டு மட்டும் 
சேர்க்கப்படாமல் இருந்திருந்தால் 
ஒருவேளை அவர்மீது
இடமாற்றம் போன்ற
நடவடிக்கை இருந்திருக்கும்..

ஒரே ஒரு தவறான தகவல்
பிற உண்மைகளை
மறைத்துவிட்டது.

மொட்டைக்கடிதம்
எழுதுவது கூட
ஒரு கலை தானோ.

No comments:

Post a Comment