Wednesday, 14 February 2018

ஒருமையா? உரிமையா?

எனது அன்புச் சகோதரர்
ஒருவர்.

வளர்ந்து வரும்
நல்லதொரு கவிஞருங்கூட.

மூன்றுநாட்களுக்கு முன்
முகநூலில் தனது
வருத்தம்ஒன்றை
பகிர்ந்திருந்தார்.

அவருடன் படித்த
ஒருசக மாணவர்
இன்று திரைப்படத்துறையில்
பாடல் எழுதிவருகிறார்.

முதல்நாள் அவரைச்சந்தித்து
உரையாடிய காட்சிகளை
விரிவாக விவரித்து
பதிவு செய்திருந்தார்.

தன்னை கவிஞர்
மட்டந்தட்டுவதுபோல்
நடந்துகொண்டதைப்பற்றி
உருக்கமாக எழுதியிருந்தார்.

என்ன நடந்திருக்கலாம் என
நான் பெற்ற பழைய
அனுபவங்களிலிருந்து ஓரளவு
யூகித்துப்பார்க்கிறேன்..

பழையநாட்களைப்போலவே
அவரை பெயர் சொல்லி
பேசியிருக்கலாம்.

இது ஒரு யூகம் தான்.

என் யூகம் தவறாகவும்
இருக்கலாம்..

சகோதரரின் அனுபவத்தால்
அவருக்குத்தானே வலிக்கும்.

பார்வையாளனான எனக்கு
வலி புரிந்தாலும் வலியின்
ஆழம் புரியாதவல்லவா?

என் பழைய நாட்களை
நினைத்துப்பார்க்கிறேன்.

1990 களில் என்
வகுப்புத்தோழன் ஒருவன்
ஒரு திமிங்கல வேட்பாளரை
எதிர்த்து நின்று
சட்ட மன்ற உறுப்பினராகிறான்.

அந்த காலகட்டத்தில்
நான் வேறு மாநிலத்தில்
பணிபுரிந்துவந்தேன்.

நெல்லைக்கு வந்திருந்தபோது
ஒருநாள் நண்பனைப்பார்க்க
குடும்பத்துடன் அவன் இல்லம்
செல்கிறோம்.

உள்ளே நுழையும்போது
கரை வேட்டிக்காரர்கள்
நண்பனை சூழ்ந்திருப்பதை
காண்கிறேன்.

எங்கே நான் அவனை
பெயர்சொல்லி ஒருமையில்
அழைத்துவிடுவேனோ என்ற
பதட்டத்தில் அவன் என்னை
வரவேற்கும்போது
"இசக்கி ராஜன் ...
வாருங்கள்.. நன்றாக
இருக்கிறீர்களா" என்று
கேட்கத்தொடங்கிவிட்டான்.

நானும் நிலைமையை
சரியாகப்புரிந்து கொண்டு
"நல்லாயிருக்கிறோம்.
எம்எல்ஏ நல்லாயிருக்காப்லயா?"
என்று பக்குவமாகக்கேட்டேன்.

பத்து நிமிட நேரத்தில்
கரைவேட்டிகள் ஹாலைவிட்டு
வெளியேறுகிறார்கள்..

அதற்குப்பின்னர் ..
வழக்கம்போல்
நீ, ஏல, போல, வால
என்று ஒருமையில் பேசி
பொழுதைப்போக்கினோம்.

இன்னொரு சம்பவம்..

என் நண்பர் ஒருவர்..
ஒரு கிளையில்
உதவியாளராக
பணியாற்றினார்..

அலுவலகப்பணியில்
அவருடன்
ஒன்றாகச்சேர்ந்து
ஒன்றாக அரட்டையடித்து
மிக நெருக்கமாகிருந்த
வேறு ஒரு நண்பர்
அகில இந்திய அளவில்
நடைபெற்ற தேர்வு
ஒன்றின் மூலம்
நேரடி அலுவலராக
பதவி உயர்ந்து
முதுநிலைக் கிளைமேலாளராக
அதே கிளைக்கு
பணி மாற்றத்தில்
வருகிறார்.

"சார்" என்ற அடைமொழி
சேர்த்து அழைக்கவா,
வழக்கம்போல்
பெயர் சொல்லி அழைப்பதா
என்று இருவருக்குமே
ஒரு தர்ம சங்கடம்.

சார் என்று
அழைக்கவும்  வேண்டாம்,
மற்றவர்கள் முன்பு போல்
பெயர் சொல்லி
அழைக்கவும் வேண்டாம்,
பிறர் இருக்கும்போது
ஒருவருக்கொருவர்
என்ன தலைவரே என்று
அழைத்துக்கொள்ளலாம்
என்று ஒரு  முடிவு
எடுத்துக்கொள்கிறார்கள்.

தனியாக இருக்கும்போது
நீ நான் என்ற வழக்கமான
பேச்சுத்தான்.

இன்னொரு சம்பவம்.

சிற்றூர் ஒன்றில்
பள்ளிக்கல்வியை ஒன்றாக
படித்த நண்பர்கள் இருவர்.

ஒருவர் எல்ஐசி யில்
வளர்ச்சி அலுவலர்.

இன்னொருவர் அலுவலராக
நேரடி நியமனம் பெற்று
எல்ஐசி யில் செயல் இயக்குனர்
பொறுப்புவரை உயர்ந்தவர்.

வளர்ச்சி அலுவலர்
என்னிடம் பேசும் போது
அவரது நண்பரை சார் சார்
என்று சொல்லித்தான்
விசாரிப்பார்.

நான் ஒருமுறை அவரிடம்
தனியாக இருக்கும்போது
சரளமாக பழகுவீர்களா,
தயக்கத்துடன் பழகுவீர்களா
எப்படி ஒருவரை ஒருவர்
அழைத்துக்கொள்வீர்கள்
என்றெல்லாம் கேட்டேன்.

அதற்கு அவர்
நீ நான் என்று
ஒருமையில்தான்
அழைத்து மகிழ்வோம் என்றார்

இன்னொரு கிளை..

கிளையின் மேலாளரும்
உதிக்கிளை  மேலாளரும்
சில வருடங்களுக்கு முன்
உதவியாளர்களாக
ஒரேகிளையில்
ஒன்றாகக்குப்பை
கொட்டியவர்கள்.

உதவிக்கிளை மேலாளர்
எல்லோர்முன்பும் எங்கே
தன்னை பெயர்சொல்லி
அழைத்துவிடுவாரோ
என்ற பெரும் பயம்
கிளைமேலாளருக்கு.

இந்த பெரும்  பயத்தில்
இவரே முந்திக்கொண்டு
அவரை "என்ன ஏ.பி. எம் சார்"
என்று அழைத்துவிடுவார்.

இப்போது கட்டாயமாக
உதவிக்கிளைமேலாளர்
மேலாளரை  "சார்" போட்டு 
கூப்பிட்டாலாமல்
இருக்கமுடியாது.

இது ஒரு வகையான
டெக்னிக்.

வேறொரு  கிளை..

ஒரு கிளை மேலாளர்..

அலுவலகம் சம்பந்தப்பட்ட
தேர்வுகளையெல்லாம்
வெற்றிகரமாக எழுதிமுடித்து
பதவி உயர்வின் மூலம்
அந்தக் கிளையின்
கிளை மேலாளராக
இருந்து வந்தார்.

பள்ளிப்படிப்பிலிருந்து
கல்லூரிப்படிப்பு வரை
ஒன்றாக படித்த இருவர்
அதே கிளையில்
பணியாற்றி வந்தனர்.

அவர்கள் தொடர்ந்துவரும்
நட்பின் அடிப்படையில்
அவரை பெயர்சொல்லியும்
ஒருமையில்  அழைத்தும்
எப்போதும் போல் பழகுவார்கள்.

கிளைமேலாளரும்
நட்பின் அடிப்படையில்
பதவி பற்றி நினைக்காமல்
பழைய  நட்பைப் பேணிவந்தார்.

பக்கத்துக்கிளையில்
உதவிக்கிளை மேலாளராக
பணிபுரிந்த ஒருவர்.

அவர் என்னுடன் பேசும்போது
மேற்கூறப்பட்ட 
கிளை மேலாளரை
பெயர் சொல்லி பேசிவந்தார்.

ஒருமுறை நான் அவரிடம்
உங்களை விட உயர் பதவியில்
உள்ள ஒருவரை
இப்படி  பெயர் சொல்லி
குறிப்பிடலாமா?
நீங்களே இப்படி அழைத்தால் மற்றவர்கள் கிளைமேலாளரை
மரியாதையுடன்
நடத்துவார்களா
என்று கேட்டேன்..

அதற்கு அவர்
அவர்கள் இருவரும்
சிறுவயது முதலே
ஒரே தெருவில்
ஒன்றாக விளையாடி
வளர்ந்தவர்கள் எனவும்,
சரியாகச்சொல்வதென்றால்
ஒரு வகுப்பு
பின்னால் படித்தவர்
தான் கிளை மேலாளர்
என்று கூறி
அதனால் தான்
அவன் இவன் என்று
ஏகவசனத்தில்
பேசுவதாகவும் சொன்னார்.
இன்று கிளையின் மேலாளர்
என்றாலும் தன்னைப்பொருத்தவரை
பால்ய நண்பன் தானே
என்று கேட்டார்.

இன்னொருசம்பவம்...

ஒரு கோட்டத்தில்
முதல் நிலையில்
பதவியில் இருந்தவரை விட
இரண்டாமிடத்தில் இருந்தவர்
வயதில் பல ஆண்டுகள்
மூத்தவர்.

எனவே வயதிற்காக
அவரை எப்போது மே
சார் என்றே அழைத்து
முலாமவர் மரியாதை
கொடுப்பார்.

ஆனால் மண்டலமேலாளர்
கோட்டத்திற்கு வரும்போது
அவர் முன்னிலையில் 
இவரை பெயர்சொல்லி
அழைப்பார்.

மண்டலமேலாளர்
வந்து சென்ற பின்
மறுபடியும் சார் என
அழைக்கத் தொடங்கிவிடுவார்.

இப்படி பழசை மறந்துவிட்டு
பதவிக்காக பெயர் சொல்லி
அழைக்கக்கூடாது என்ற
எதிர்பார்ப்பில் சிலர்.

உயர் பதவியில் இருந்தாலும்
பழைய பழக்கத்தை
பின் பற்றுவேன் என்ற
பிடிவாத த்தில் சிலர்.

நட்பு வேறு..பதவிக்கு
கொடுக்கவேண்டிய
பெருமை வேறு என்று
நினைப்பவர்கள் சிலர்..

என்னைப்பொறுத்தவரை
அலுவலகப்பணிகாலத்திலும்,
பணிநிறைவிற்குப்பின்னரும்,
அனைவரும் சார் சார் என
அழைப்பதைக் கேட்டு கேட்டு
புளித்துப்போய்விட்டது.

எங்கேயாவது  யாராவது
எப்போதாவது என்னை
பெயர் சொல்லி
கூப்பிட மாட்டார்களா,
நீ வா போ என்று
அழைக்கமாட்டார்களா என்று
என் மனம் ஏங்குகிறது.

இப்படிப்பட்ட நேரங்களில்
ஒருமையில் அழைக்கக்கூடிய
என் நண்பர்களான
*காந்திமதிநாதன்,*
*ரைஸ்மில் ஜெய்சிங்,*
"ஆர்.பி.ஆதித்தன்*
*சுடலையாண்டி,*
*விசுவன்,*
*சண்முகவேலாயுதம்,*
*கோமதிநாயகம்*
*ஶ்ரீமூலநாதன்,*
*குமார்,*
*விஜயன்,*
*நாகராஜன்,*
*சங்கரலிங்கம்*
*பால்ராஜ்*
போன்றோரை நானே
என் கைபேசியில்
அழைத்து பேசி மகிழ்வேன்.

பெயர் சொல்லி அழைத்து
*நீ-நான்* என்று பேசும்போது
கிடைக்கும் பேரானந்தத்தை
உளமாற உணரத்தான் முடியும்..
எழுதமுடியாது.

துவக்கத்தில் கூறிய
கவிஞர் சகோதரரின்
திரைப்படக்கவிஞரான
வகுப்புத்தோழ நண்பர்
தன்னை பெயர் சொல்லி
அழைத்ததை
விரும்பவில்லையோ
என்னவோ?

அதனால்தான் மட்டந்தட்டி
பேசியிருப்பாரோ?

No comments:

Post a Comment