Thursday, 8 February 2018

வணிகம் வேறு நட்பு வேறு

நேற்று மாலை
எனது ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க ஆதார் அட்டையின்
Xerox copy ஒன்று
அவசரமாக தேவைப்பட்டது.

அருகிலிருக்கும்
ஒரு நகலத்திற்கு
சென்றிருந்தேன்.

எல்ஐசி முகவர் ஒருவரால்
நடத்தப்படும் நகலகம் அது.

எப்போதும்
அவர் களத்தில்
இருப்பாராதலால்
அங்கு அவரை பார்ப்பது
அரிதினும் அரிது.

நான் சென்றிருந்தபோது
முகவர் அங்கு இருந்தார்.

நகல் எடுத்து முடிந்ததும்
இரண்டு ரூபாய்
நாணயத்தை எடுத்து
நீட்டினேன்.
அவர் வேண்டாம் என்று
கூறிவிட்டார்.

அப்போது எனக்கு
பழைய நினைவு ஒன்று
மனதில் நிழலாடியது.

1975 ம் வருடம்.
ஆந்திரமாநிலம்
சித்தூர் கிளையில்
பணியாற்றுகிறேன்.

ஒரு முகவர்.
அவர் சிறிய அளவில்
ஒரு துணிக்கடை
நடத்தி வந்தார்.

ஒரு நாள்
இரண்டு பனியன்கள்
வாங்க வேண்டியிருந்தது.

முகவரின் கடைக்கு சென்றிருந்தேன்.

பில் போடும்போது
நான் அவரிடம்
"செட்டி காரு...
விலையை கொஞ்சம்
குறைத்து போடுங்க"
என்று கூறினேன்.

அதற்கு அவர்
ஒரு பதில் சொன்னார்
பாருங்க.....
அதில் மொத்த
விற்பனைத்தத்துவமே
அடங்கி இருந்தது.

அவர் என்னைப்பார்த்து
"ராஜன் காரு....
இது வணிகம்.
இதில் இங்கு
எல்லோருக்கும்
ஒரே விலைதான். தள்ளுபடியெல்லாம்
கிடையாது.
நான் நம்ம ஆபீசில்
பணம் கட்ட வரும்போது
நான் உங்களின் நண்பன்
என்பதால் பிரிமியத்தில்
தள்ளுபடி தருவீர்களா?

அதைப்போல் தான்
இந்த வணிகமும்.

நீங்கள் நண்பர் என்பதால்
உங்களுக்கு
காபி,வடை என்று
வாங்கித் தந்து
மகிழ்விக்கிறேன்.

அதற்கான செலவு
நிச்சயம் நீங்கள்
பனியன் விலையில்
எதிர்பார்க்கும்
தள்ளுபடியைவிட
கூடுதலாகவே இருக்கும்.

எனவே நட்புக்காக
எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
செலவழிக்கத் தயார்.

ஆனால் வணிகத்தில்
ஒரு பைசா கூட
குறைக்கமாட்டேன்."

நட்பும் வணிகமும்
வெவ்வேறு என்று
அழகாகக் கூறினார்.

ஒப்புக்கொள்ளும்படி
அவரது வார்த்தைகள்
அமைந்தன.

தமிழ்நாட்டுக் கிளையில்
ஒரு முகவ நண்பர்.
அவர் அடிக்கடி
என்னிடம் கூறுவது
இது தான்.....
" நான் எனது வணிகத்தில்
பிரிமியம் தள்ளுபடி என்று
வாடிக்கையாளரிடம்
ஒரு தொகையைக்கூறி
அந்த தொகையை
எனது கையிலிருந்து போட்டு
அலுவலகத்தில் செலுத்தமாட்டேன்.

ஆனால்....
வாடிக்கையாளர்களின்
குடும்ப விழாக்களில்
கணிசமான மதிப்பில்
பரிசுப்பொருட்களை வழங்கி
அவர்களக மகிழ்விப்பேன் "

இதுவும் எதிர்ப்பின்றி
ஏற்றுக்கொள்ளக்கூடிய
கருத்துதான்.

வேறு ஒரு மாநிலத்தில்
பணியாற்றும் போது
கிடைத்த அனுபவம் ஒன்று.

ஒரு முகவர்
வாடிக்கையாளருக்கு
எந்த ஒரு சேவையையும்
இன்முகத்துடன்
செய்து கொடுப்பார்.

அவர் ஒரு டீசல் இஞ்சின்
அம்பாசடர் கார் வைத்திருந்தார்.
அவரது வாடிக்கையாளர்கள்
வருடத்திற்கு ஒருமுறை
அந்த காரை ஓட்டுனரோடு
இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடும்பத்துடன்
ஐந்துநாட்கள் வரை
இன்பச்சுற்றுலா
சென்று வரலாம்.
முன்பதிவு செய்து
இந்த வசதியை பெறலாம்.
டீசல் செலவு மட்டும்
வாடிக்கையாளர் பொறுப்பு.

இது நல்லதொரு
வணிக வியூகம் தான்.

வேறு ஒரு முகவர்....
அவரது ....
வாடிக்கையாளர்களில்
90 சதவிகிதம்
வெளிநாட்டில் பணிபுரியும்
இந்தியர்கள்.

அவர்கள் நாட்டுக்கு
வரும்போதும் சரி,
திரும்பிச்செல்லும்போதும் சரி,
விமான நிலையம்
போகவும் வரவும்
முகவரின் இலவச
கார் சேவை
ஓட்டுனர் வசதியோடு
உறுதியாக உண்டு..

வாடிக்கையாளரை
வசப்படுத்த இப்படிப்பட்ட
நல்லுறவு பேணும்
நடவடிக்கைகளை
வாரி வழங்கும்
வெற்றியாளர்கள்
நிறைய உண்டு.

இவர்கள் நட்புக்காக எவ்வளவு
வேண்டுமானலாலும்
செலவழிப்பார்கள்.

ஆனால் வணிகத்தில்
கறாராக இருப்பார்கள்.

No comments:

Post a Comment