நான் பிறந்து
சிறுவனாக வளர்ந்து
ஐந்தாம்வகுப்புவரை
படித்த ஊராகிய
பாளையங்கோட்டைக்கு
அருகேயுள்ள மேலப்பாட்டம்
என்ற சிற்றூருக்கு
இன்று மாலை
சென்றிருந்தேன்.
என் இல்லத்தரசியையும்
அழைத்துச்சென்றேன்.
போகிற வழியில் பார்த்த
ஒவ்வொரு இடமும் என்
சிந்தனையை பின்னோக்கி
இழுத்துச் சென்றது.
சீவலப்பேரி சாலையில்
இடிந்து விழுந்து சிதிலமாகக்
கிடக்கும் பிச்சைக்காரர் விடுதி.
கொஞ்சதூரத்தில் இடதுபுறம்
உள்ள விலக்கு.
திரும்பியபிறகு
காவலர் களுக்கு
துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக
இருந்த இடம் புதராக
இருந்து பழைய இடம்
தெரியவில்லை.
வலது புறம் பழைய
சட்டமன்ற உறுப்பினர்
கானாவின் முயற்சியால்
வாங்கப்பட்ட சுந்தரனார் பலகலைக்கழகத்திற்குண்டான
இடமும் புதர்
மண்டிக்கிடக்கின்றது
ஒத்தா லமரத்து ஓடை
இருந்த இடம் தெரியவே
இல்லை.
நிமிரந்து பார்த்தால்
பரம்பு தெரிந்தது.
இங்கு திருடர்கள்
பதுங்கு குழியான
கள்ளம்பொந்துகள்
உண்டு என்ற தகவல்
நினைவிற்கு வந்தது.
மழைகாலத்தில்
ஊத்தில் இருந்து
வரும் ஒரு நீரோடையில்
குளித்தது நினைவிற்கு
வந்தது.
அந்த சாலையில்
நடந்து சென்று
பாளையங்கோட்டையில்
உள்ள பள்ளியில் படித்ததும்
அப்படி போய்வரும்போது
சில கள்ளன்கள்
எங்களிடம் இருந்த
சம்படத்தைப்பிடுங்கி
சாப்பாட்டை
எடுத்துக்கொண்டதும்
நினைவிற்கு வந்தது.
வலது பக்கத்தில்
செட்டிகுளம் என்ற சிற்றூர்
தெரிந்தது.
மாட்டுப்பொங்கலுக்கு
கிருஷ்ணாபுரத்திற்கு
செட்டிகுளம் வழியாக
சென்றது நினைவிற்கு
வந்தது.
கொஞ்சதூரம் போனதும்
இடது பக்கம் கல் குவாரி
தூர்ந்து போய் இருந்தது
தெரிந்தது.
அந்த நாட்களில்
லாரிலாரியாக
கற்கள் உடைத்துச்செல்லப்பட்டது
நினைவிற்கு வந்தது.
திறந்த வெளியில் இருந்த
இசக்கியம்மன் சிலைகளும்
சுடலைமாடசாமி பீடங்களும்
இன்று அழகிய மண்டபத்தில்
கொலுவீற்றிருந்தன.
கொஞ்சதூரத்தில்
மண்பானை சுடப்படும்
சூளை இருந்த இடத்தில்
ஒரு வீடு இருந்தது.
அடுத்து ஒரு சிறிய
ஓடை இருந்த இடம்
சுருங்கிப்போய் இருந்தது.
அது தாண்டியதும்
இடதுபக்கத்தில்
நான்
ஐந்துவரை படித்த
அரிஹர ஐயர் பள்ளிக்கூடம்
உண்டு.
நான்படித்த
வகுப்புக்கட்டிடங்கள்
இடித்து தரைமட்டமாக
இருந்ததைப் பார்த்து
கண்களில் கண்ணீர்
வந்துவிட்டது.
தற்காலிகமாக ஒரு கட்டடம்
தென்பட்டது.
பள்ளிக்கூடத்தை
கட்டிக் கொடுத்தவரின்
பெயர் அங்கு இருந்த
பெயர்ப்பலகையில்
சரியாகத்
தென்படவில்லை.
அதைக்கடந்ததும்
இடது பக்கம்
பாழடைந்த பவுண்டி
தென்பட்டது.
மாட்டையும் ஆட்டையும்
பிடித்து அடைத்துவைக்கும்
ஒரு சிறைமாதிரியான கூடம்
அல்லவா அது.
அதன் வலதுபுறத்தில் இருந்த
ஒரு காப்பிகிளப் இருந்த இடம்
தெரியாமல் இடிந்து கிடந்தது.
அதற்கு அடுத்து
பஜனைமடம் அன்றிருந்தது
போலவே இருந்தது.
இடது பக்கத்தில்
அந்த நாட்களில்
காலியாக யிருந்த
கபடி விளையாடும்
இடத்தில் இப்போது ஒரு
கட்டிடம்.
பக்கத்தில் உள்ள இடத்தில்
திருக்கார்த்திகைக்கு
சொக்கப்பனை ஏற்றும்
வைபவம் நினைவிற்கு வந்தது.
கொஞ்சதூரத்தில்
வாய்க்கால் பாலத்தை
ஒட்டிய சேர் வீடு
அப்படியேயிருந்தது.
இடது புறம் திரும்பினால்
கிருஷ்ணாப்பேரி போகும்
ரோடு.
கொஞ்சதூரத்தில் வந்த
ஒரு சிறிய வாய்க்கால் பாலம்.
பாலத்துச்சுவர்களில்
கரித்துண்டால்
"இந்தி ஒழிக" என்று எழுதியதும் மரத்தில் ஏறி வாய்க்கால் நீரில்
குதித்ததும்,
குட்டிக்கரணம் அடித்ததும்
மனதில் மின்னலாய்.
அந்த பாலத்தைக்கடந்து
சிவன்கோவில் செல்லும்
வழியில் இருந்த
கிருஷ்ணய்யர் வீடும்
முத்துராமய்யர் வீடும்.
வாய்க்காலில் நீர் வராத
காலத்திலும்
குளத்தில் தண்ணீர்வற்றிய
காலத்திலும்
அவர்கள் வீட்டிற்கு
பின்னால் இருந்த கிணற்றில்
ஊரே வந்து துணிகளை
துவைத்து குளித்துச்
செல்வது நினைவிற்கு
வந்தது.
கிணற்றில் தொங்கும்
துலாவைப்பிடித்து
துள்ளிக்குதித்து
உள்ளே இருக்கும்
கல்படியில் நின்று
பெரிய வாளியில்
தண்ணீர்
இறைத்த சாகசம்
பசுமையாய் இன்னும்
முழு நினைவில்.
இப்போது
வாய்க்காலில்
தண்ணீர் இல்லை.
ஊர்ச்சாக்கடையும்
ஓடவில்லை.
ஓடை சுத்தமாக இருந்தது கண்டு
மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கிருந்த சிவன்
கோவிலுக்குச்சென்று
பிரதோஷ பூஜையில்
கலந்துகொண்டோம்.
அங்கிருந்தவர்களிடம்
நண்பர் ஹரிஹரன்
என்னை இந்த ஊர்க்காரன்
என்று என் தந்தைபெயரை
குறிப்பிட்டுச்சொல்லி
அறிமுகம் செய்தபோது
எனக்குள் ஒரு
இனம் புரியாத புல்லரிப்பு.
என் தந்தையின் நண்பரான
பெரியவர் திரு சாமிநாதன் அவர்களைச்சந்தித்ததில்
மிக்க மகிழ்ச்சி.
நல்ல ஒரு அனுபவம் இன்று.
பழசை அசைபோடமுடிந்ததில்
மிக்க மகிழ்ச்சி.
No comments:
Post a Comment