Friday, 15 September 2017

இரண்டு கையும் தட்டடணும்

"ஏல ..எசக்கி..
எங்கயிருந்து வார..
என்னல விசேஷம்"

"தூத்துக்குடியில ஒரு
கல்யாணம்.
போயிட்டு இப்பந்தான்
வந்தோம்"

"வந்தோம்ன்னு
சொல்லுதேரு..
ஆச்சியும் அய்யருமா
போனேளா?"

"ஆமாவே.. சொடல..

ரெண்டுபேருந்தான்
போனோம்.

நீரு  வில்லங்கமா
எதும் கேக்கதுக்கு
மின்னக்கூட்டி நானே
சொல்லிருதம்யா?

*எலைக்கணக்கு இல்லாத சாப்பாடுதாம்யா*"

"நீயே சம்மன் இல்லாம
ஆஜர்  ஆயிட்ட..
அதுவும் நல்லதுதான்"

"சொடல....
கல்யாணவீட்ல
நம்மகூட படிச்ச
கல்லத்தியானை
பாத்தண்டே"

"அந்தப்பயா
என்ன சொன்னான்?"

"அவங்க ஊரு
எம்எல்ஏ மந்திரியா
இருக்காருல்லா..

அவரை அவனுக்கு
நல்லா தெரியுமாம்.

அந்த மந்திரி
அவனை மாமான்னுதான்
பாசமா கூப்புடுவாராம்.

சொடலை....
ஒமக்கு மந்திரியோட
அய்யா வை நல்லாவேத் தெரியும்.
அவொ  வீட்டுக்கெல்லாம்
நீரு  போயிருக்கேரு.."

"ஆமடே...
புரிஞ்சிட்டு..
ரெண்டு மூணு தடவை
அவொ வீட்டுக்கு
போயிருக்கேன்.
டிபன்லாம்  கூட
சாப்பிட்டிருக்கேன்"

"கல்லத்தியானுக்கு
வேண்டியவன்
ஒருத்தனுக்கு
மதுரையிலேயிருந்து திருநெவலி ஆபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வேணுமாம்.

அதுக்காக மந்திரியை
போய் பாத்து
பேசினானாம்.

மந்திரிகிட்ட ......
மருமவன..
மூணு லச்சம் போதுமா..

இன்னம் வேணும்னாலும்
வாங்கித்தாரேன்னு
சொன்னானாம்.

மந்திரியோ
இது போதும் மாமான்னு
சொல்லிட்டாராம்.

மந்திரி உண்மையிலே  நல்லமனுஷந்தாம்னு
சொன்னாம்யா..

நான் ஒடனே
கல்லத்தியாங்கிட்ட
மூணு லச்சம்  லஞ்சம் கொடுத்து
அப்படி ஒரு ட்ரான்ஸ்ஃபர் தேவையாடேன்னு
கேட்டதுக்கு
அந்த ஆபீஸ்
சூப்பிரண்டு போஸ்ட்ல
ஒருநாளைக்கு எப்படியும்
இருபதாயிரம் ரூபாய் வரை
வருமானம் கெடைய்க்கும்.

அதனால  இந்த
மூணு லச்சத்தை ஆறேமாசத்துல
எடுத்துருவாரு ன்னு
சொல்லுதாம்வே.

நல்ல மந்திரி..
நல்ல சூப்பிரண்டு"

"ஏல..எசக்கி..
நாங்கேக்க கேள்விக்கு
பதில் சொல்லுல..

இந்த மந்திரிக்கு
மூணு லச்சம் லஞ்சம் கொடுக்காம சாதாரணமா
ட்ரான்ஸ்ஃபர்ல வந்தாக்கி
அந்த சூப்பிரண்டு
அவர் நெதம் வாங்குத
லஞ்சத்தை கொறைப்பாரா..

இல்ல
லஞ்சமே வேங்காம
நேர்மையா
வேலை பாப்பாரா,"

"வேங்காமலும் இருக்கமாட்டாரு..
வேங்குததை
கொறைக்கவும்
மாட்டாரு."

"அப்பம்னா
மந்திரியை மட்டும்
எப்புடில குத்தம்
சொல்லுத.

அவரோட வீட்டைத்தட்டி
இவனுவளால்லா
பணத்தை கொண்டுபோய்
கொடுக்கானுவொ.

அவரை மட்டும்
தப்பு சொல்லாதல.

லஞ்சம் வாங்குதது விபச்சாரத்துக்கு சமம்னு
அரசியல் வாதிகள் கிட்டயும்
அரசு அதிகாரிகிட்டயும்
செருப்பால அடிச்சமாதிரி சொல்லணும்..

அப்பமாவது
திருந்துதானுவொளான்னு
பாக்கணும்."

சொடலை சொன்ன மாதிரி
எல்லாரும் திருந்தணும்.

பொதுமக்களும்
லஞ்சம் ஏன் நாங்க
கொடுக்கணும்னு நெனய்க்கணும்.

No comments:

Post a Comment