நாற்பது ஆண்டுகளுக்கு
முன்பு நடந்தது....
1974 ல்
எல்ஐசி நிறுவனத்தில்
உதவியாளனாக
முதன்முதலில்
ஆந்திரமாநிலம்
சித்தூர் நகரில் பணியமர்ந்தேன்.
அங்கு திரு ருத்திர பிள்ளை
என்ற மூத்த முகவர்.
நல்ல உழைப்பாளி..
திட்டங்கள் அதன் பலன்கள்
பற்றிய ஆழ்ந்த ஞானம்
அவருக்குண்டு.
எந்த எந்த திட்டங்கள்
எந்த எந்த வயதினர்க்கு
ஏற்றவை என்பதை
வாய்ப்பாளர்களிடம்
நன்றாக விளக்கி
கூறுவார்.
சைக்கிளில் கிராமம்
கிராமமாக சுற்றி
வருவார்.
எல்ஐசி
நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து அவரைப்போன்ற
முயற்சியில்
சிறந்த முகவர்கள்.
அதே கிளையில்
வேணுகோபால் ரெட்டி என்று
ஒரு முகவர் இருந்தார்.
அந்த நேரம் நெருக்கடி
நிலை நீக்கப்பட்டு
பொதுத்தேர்தல் முடிந்து
மாநில மேலவைத்தேர்தல்
நடைபெற்ற நேரம்.
திரு வேணுகோபால் ரெட்டி
ஆசிரியர் தொகுதிக்கான
வேட்பாளர்.
தேர்தல் வேலையை
சிறப்பாக பார்த்துக்கொண்டே
ஒருநாள் அலுவலகம் வந்தார்.
எனக்கு நெருங்கிய நண்பர்
என்பதால் தேர்தல் வேலை,
வெற்றி வாய்ப்பு
பற்றியெல்லாம்
விசாரித்த பின்னர்
"ரெட்டி காரு ..
தேர்தல் பணி
ஒரு பக்கம் இருந்தாலும்
முகவர் பணியிலும் விடாது
கவனம் செலுத்துங்கள்"
என்றேன்.
அதற்கு அவர் சொன்ன
பதில் என்னை வியப்பில்
ஆழ்த்தியது.
" ருத்ரபிள்ளை அவர்கள்
உள்ளவரை நான்
முகவர் பணியில்
தனிக்கவனம் செலுத்தி
அலைய வேண்டிய
அவசியம் இல்லை.
அவர்
நமது நிறுவனத்தின்
திட்டங்களைப்பற்றி
நன்றாக விளக்கிக்கூறி
எங்கள் பகுதியில்
ஒரு நல்ல தளம்
அமைத்துள்ளார்.
விளக்கங்களை
விரிவாக தெரிந்து
தெளிவு கொண்ட
எங்கள் பகுதி நபர்கள்
என்னை அழைத்து
என்மூலம்
சிறந்த திட்டங்களில்
சேர்ந்து விடுவார்கள்.
நான் எதையுமே
விவரமாக விளக்கிக்
கூறவேண்டியதில்லை.
அவர்கள் ஏதாவது
விளக்கம் கேட்டால்
நான் திணறிவிடுவேன்.
ருத்ரபிள்ளை நன்றாக
விளக்கிக்கூறியிருப்பதால்
அந்த நிலைமை வராது.
நான் ருத்திரபிள்ளையை
போற்றுகிறேன்" என்று
என்னிடம் கூறினார்.
எல்ஐசியில்
ருத்ரபிள்ளை போல்
ஆழ்ந்த அறிவு உள்ள
சிறந்த முகவர்கள்
நிறைய உள்ளனர்.
வேணுகோபால் ரெட்டி போல் முயற்சியேதும் இல்லாமல் அறுவடைசெய்யும் ஒரு சில முகவர்களும் உள்ளனர்.
பலன் முழுதும்
கிடைக்காது போனாலும்
பயணத்தை தொடரும்
ருத்ரபிள்ளை போன்றோர்
பாராட்டுக்களுக்கும்
போற்றுதற்கும்
உரியவர்களே.
வணிகத்தை முடிப்பதற்கு
பயிற்சி மட்டுமே பத்தாது.
அதைப்போல்
முயற்சி மட்டுமே
கை கொடுக்காது.
விற்பனையை முடித்து
கையொப்பத்தையும்
கையில் காசையோ
காசோலையை
வாங்குவதற்கு
தனித்திறமை வேண்டும்.
இதை அனுபவம்தான்
பெற்றுத்தரும்.
பானா.ஈனா..
No comments:
Post a Comment