Friday, 11 August 2017

நாநயம் மட்டுமல்ல நாணயமும் தேவை

நான் 2011-12 களில் சென்னை
மண்டல அலுவலகத்தில்
பணியாற்றியபோது
அயனாவரத்தில் உள்ள
அலுவலர் குடியிருப்பில் வாசம்.

பக்கத்தில் பிரபலமான
கொன்னூர் நெடுஞ்சாலை.

அந்த நெடுஞ்சாலையில்
குஜராத் காரர் ஒருவர்
ஒரு சிறிய உணவகம்
நடத்தி வருகிறார்.

ஒருநாள் ஏதோ ஒரு
அவசரத்தேவைக்காக
அந்த உணவகம்
சென்றிருந்தேன்.

உணவகத்தின் உள்ளே
"எல்லாமே பாதி விலை"என
கொட்டை எழுத்துக்களால்
எழுதப்பட்ட அட்டைகள்
இரண்டு மூன்று தொங்கிக்கொண்டிருந்தன.

விலைப்பட்டியலில்
காப்பி ரூ.15
இட்லி ரூ.10
தோசை ரூ 50..

இப்படியாக அனைத்து
பொருட்களின் விலையும்
குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு முதியவர்..
அவர் உறுதியாக  ஓர்
ஓய்வூதியராகத்தான்
இருக்கவேண்டும்.

ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு
ரூ 25 கொடுத்தார்.

கடை முதலாளி ரூ.50
கேட்டுக்கொண்டிருத்தார்.

முதியவர் உரிமையாளரிடம்
தோசையின் விலை
ஐம்பது ரூபாய் என்றால்
பாதி விலை
இருபத்தைந்து ரூபாய்தானே
என வழக்காடிக்கொண்டிருந்தார்.

அதற்கு அந்த
உணவக உரிமையாளர்
நான் குறிப்பிட்டிருப்பது
ஓட்டல் சரவணபவன் விலையில்
பாதி விலை என்று.

ஓட்டல் சரவணபவனில்
தோசை நூறு ரூபாய்.
எங்கள் கடையில்
தோசை ஐம்பது ரூபாய்.
பாதி விலையைத் தானே
பட்டியலிட்டிருக்கிறேன்.

ஆதலால் ஐம்பது ரூபாய்
கொடுங்கள் என
கேட்டுக்கொண்டிருந்தார்.

முதியவர் எவ்வளவு
மோதினாலும் கடைக்காரர்
நயமாகப்பேசி
ஐம்பதுரூபாய் தான் என்று
அடித்துக்கூறிவிட்டார்.

முதியவரும்
முனங்கிக்கொண்டே
முழுப்பணத்தையும்
முதலாளியின்
முகத்தில் விட்டெறிந்துவிட்டு
வெளியேறிவிட்டார்.

இதைப்பார்த்தபோது
அந்த குஜராத்காரரின்
விற்பனை வியூகத்தை
போற்றுவதா இல்லை
வியாபாரத் தந்திரத்தை
தூற்றுவதா இல்லை
அந்த முதியவரின்
நிலைமைக்காக
பரிதாப்ப்படுவதா
என்று புரியவில்லை.

பிறகு நான்
அந்த கடைஉள்ள
திசையில்கூட
தலைவைத்து
படுப்பதில்லை.

நான் சமீபத்தில்
ஐஆர்டிசி செயலி மூலம்
பயணச்சீட்டை
முன்பதிவு செய்ய
முயற்சித்தேன்.

மூத்த குடிமகனுக்கான
சலுகை வேண்டுமா என்று
கேள்வி வந்தது.
ஆம் என்ற விருப்பத்தை
√ மூலம் தெரிவித்த பிறகு

மூத்த குடிமக்களுக்கான
சலுகையில் பாதியை
விட்டுக்கொடுக்க
சம்மதமா என்ற ஒரு
கேள்வி தோற்றியது.

யாருக்குமே பழக்கத்தில்
உள்ள வழக்கப்படி
√ என்று தான்
தெரிவிக்கத்தோன்றும்.

கொஞ்சம் விழிப்போடு
இருக்கவில்லை எனில்
√ என்பதை பதிவு செய்தால்
சலுகை முழுவதும்
கிடைக்காமல்  போய்விடும்.

நான் தவறுதலாக
√ என்று அழுத்திவிட்டதால்
எனக்கு கிடைக்கவேண்டிய
சலுகை முழுவதும்
கிடைக்கவில்லை.

இப்படி ஒரு அனுபவத்தை
அனுபவித்தபோது
ஏனோ அந்த அயனாவரம்
குஜராத்காரரின் மோசடி
விளம்பரம் நினைவிற்கு
வந்து தொலைத்தது.

எப்படியெல்லாம்
மோசடி பண்றாங்க..

எப்படியெல்லாம் நாம்
மோசம் போகிறோம்.

இந்த அனுபவத்தை என்
நண்பர்களுள் ஒருவரான
தில்லைநகர்  சத்யாவிடம்
கூறிய போது அவர்
என்னைப்பார்த்து
நீங்கள் முகவர்களிடம்
"நா நயம்" வேண்டும் என்று
நாள் தோறும் பேசியதை
மறந்துவிட்டீர்களா என்று
ஏளனமாகக்கேட்டார்.

முகவர்கள் அனைவருக்கும்
நா நயத்துடன்
நாணயமும் சேர்ந்து
இருத்தல் வேண்டும்
என்று நான் சொல்வதை
தனக்கு வசதியாக

மறந்துவிட்டார்.
மறைத்தும்விட்டார்.

மோசடிக்காரர்களிடமிருந்து
நம்மை நாமேதான்
காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

அந்த செயலியில் வரும்
கேள்விகளை
இங்கு இணைத்துள்ளேன்.

நீங்களாவது
விழிப்புடன் இருங்கள்.

No comments:

Post a Comment