""ஏல..எசக்கி..
செம்பகத்தக்கா மவன்
நெல்லையப்பன்
ஊருக்கு வந்துருக்கதுனால
அக்கா கொஞ்சம் சந்தோசமா
இருக்காவொ.
வேற எதாவது விசேஷம்
உண்டால"" ன்னு
கேட்டுக்கிட்டே
சேக்காளி
சொடல வந்தான்.
"அவனுக்கென்னவே
கொறச்சல்.
பெங்களூர்ல நல்ல
வேலையில இருக்கான்.
கை நெறய சம்பளம்.
நீச்சல் கொளம்லாம் இருக்குற
பெரிய பல மாடி
வளவு வீடாம்.
வெல கூடுன காரு வேற
வச்சுருக்கானாம்.
என்னவோ ஆடி காருன்னு
பேரு சொன்னான்.
காரு வெல
நாப்பது லச்சம்னு
பவுசு கொளிச்சான்.
அவன் அம்மையை பாக்க
அங்கயிருந்து கார்லயே
வந்துருக்கான்"ன்னு
நான் பதிலு சொன்னேன்.
"அப்படின்னா ஓங்கிட்ட
ஏமுல எதுக்கோ
யாரையோ ஏசுன மாதிரி
காட்டுக்கத்தல் கத்துனான்"" ன்னு
சொடல கேட்டான்.
"ஆமவே..காரை
நம்ம தெரு முக்குல
திருப்பும் போது
வெளக்குக்கம்பத்துல
லேசா இடிச்சுட்டானாம்.
வீராவரத்துல இருக்க
கார் கம்பேனில
காரை ஒக்குட
கொண்டுபோனானாம்.
நெளுசலெல்லாம்
எடுக்கமுடியாது.
நெளிஞ்சுபோன
அந்த தகடு தாங்காது .
அந்த தகட்டை மொத்தமா தான்
மாத்தணும் னு சொல்லி பில்லு
இருபதாயிரம் ரூபாய்
தீட்டிடானாம்.
அதைப்பத்தி தாம்வே
பொலம்பிக்கிட்டே
கார்கம்பெனிகாரன
ஏசிக்கிட்டு இருந்தான்.
இன்னொரு தகவலும்
இருக்குய்யா. அவனுக்கும்
அவன் பெஞ்சாதி
காந்திமதிக்கும்
நடந்த சண்டையில அவன்
பெஞ்சாதி எவ்வளவு
எறங்கிவந்தாலும் இவன்
ஒரேயடியா
கொப்புல ஏறுதானம்.
அவ கூட சமாதானம்லாம்
கெடையாது. ஒரேயடியா
அத்து விட்டுட்டு
வேற ஆளை கட்டிக்க
வேண்டியதுதான்னு
ஒத்தக்காலுல நிய்க்கானாம்." ன்னு
நான் சொடலகிட்ட சொன்னேன்.
சொடலையும்,
"செம்பகத்தக்காவும்
இதுனாலதாம்ல
ஒரே கவலயா இருக்காவொ.
ஏங்கிட்ட எப்படியாவது
நெல்லையப்பனையும்
அவம் பெஞ்சாதி யையும்
ஒத்துமையா சேத்துவைய்க்க
ஒத்தாசை பண்ணு தம்பின்னு
சொல்லியிருக்காவொ.
நானும் நெல்லையப்பங்கிட்ட
நேரம் பாத்து பேசணும்.
இப்போ அவன்
மூடு சரியில்லைங்கிறதுனால
நாளைக்கி பேசுதேன்."ன்னு
சொன்னான்.
மறுநாளு நானும்
சொடலையும்
வாய்க்காங்கரைக்கு
போயிட்டு வரும்போது
நெல்லையப்பனும்
அந்தப்பக்கமா வந்தான்.
ஓரளவு நல்லமூடுல
இருக்கமாதிரி தெரிஞ்சுச்சு.
அதனால சொடல பேச்ச
ஆரம்பிச்சான்.
கார் ஒக்குட்டதை பத்தி
வெவரம் கேட்டான்.
நெல்லையப்பனும்
காரோட சின்ன நெளுசலை
லேசா தட்டி எடுத்து
சரி பண்ணியிருக்கலாம்.
ஆனா இந்த
கார்கம்பெனிக்காரனுவ
காசு பாக்கதுக்காக
அந்த தகடை தூக்கி
தூற எறிஞ்சிட்டு
புதுசா மாத்தணும்ங்கான்.
நெளுசலை சரிபண்ணாம
ஒரேயடியா மாத்தணும்னு
சொல்லுதது பெரிய
அநியாயம் ன்னு சொன்னான்.
சேக்காளி சொடல "மருமவன் நெல்லையப்பன் சொல்லுதது
முழுக்க முழுக்க சரிதான்" னு
சொன்னதும்
நெல்லையப்பனுக்கு அப்பிடியே
உச்சி குளுந்து போச்சு.
"சொடல மாமா சரியா
நியாயஞ்சொல்லுதாவொ" ன்னு
நெல்லையப்பன் சொன்னான்.
சொடல ஒடனே நெல்லையப்பன்கிட்ட
"மருமவன் சொல்லுதபடி
நெளுசல தட்டி எடுத்தாபோதுந்தான்.
மாத்தணுங்குறது கொஞ்சங்கூட
சரியில்லை.
இது நூத்துக்கு நூறு சரி.
இதைமாதிரி மருமவனும்
வீட்ல பெஞ்சாதியோட வந்திருக்க
மனஸ்தாபத்தை பேசியே
தீத்திரலாம். அதைவிட்டுட்டு
அத்துவிடணும் வேற புதுசா
மாத்தணும்ங்கிறது சரியில்ல
மருமவனே.
ஒங்க அப்பாவும்
அம்மாவும் போடாத சண்டையா?
நூறு சண்டைக்கு மேலேயே
வந்திருக்கும்.
அவொ என்ன ஒண்ணா
செய்து வாழத்தான செஞ்சாவொ.
அத்து விட்டுட்டு
ஒங்க அய்யா என்ன
ரெண்டாவது கல்யாணமா
பண்ணுனாரு. இல்லயே.
புருஷன் பொண்டாட்டிக்குள்ள
சண்டை வருதது சகஜம் மருமவனே.
ஒருத்தருக்கொருத்தரு பேசித்தான் தீர்த்துக்கணும் " ன்னு
சொடல சொன்னதை கேட்டதும்
நெல்லையப்பன் அப்பிடியே
அசந்து ஒக்காந்துட்டான்.
கொஞ்ச நேரம் வாயவே
தெறக்கவேயில்ல.
ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு
"மாமா நாளைய்க்கே போயி
எம் பெஞ்சாதிட்ட சமாதானமாபேசி
அவள கூட்டிட்டு வாறேன்.
ஒரு வாரம் அம்மையோட
ரெண்டுபேரும் தங்கியிருந்துட்டு
அதுக்குப்பொறவு
அம்மையையும் கூட்டிக்கிட்டு
பெங்களூர் போறோம்"னு
நெல்லையப்பன் சொன்னதுதான்..
ஒடனே சொடலைக்கு
சந்தோஷம் தாங்கல.
செம்பகம் அக்காவை
பாத்து இந்த தகவலை சொல்லப்போறேன்னு
பறந்துட்டான்.
சொடலை சொன்னது
நல்லாத்தான்
வேல செஞ்சிருக்கு.
சொடலயோட
அனுபவமும்
முதிர்ச்சியும்
அப்பப்பா....
No comments:
Post a Comment