ஆனா.மூனா...
அண்ணாச்சி..
திருச்செந்தூர் கிளையில்
ஒரு முன்னணி முகவர்.
பழுத்த அனுபவசாலி...
எந்த வகை
வாய்ப்பாளரையும்
வளைத்துவிடும்
வாய்ச் சாமர்த்தியம்
இவரது சிறப்பு.
1992-94 ல்
நான் அந்த கிளையில்
கிளை மேலாளர்.
இவருடன் வாய்ப்பாளரை
தேடிச்சென்று அவர்களை
வாடிக்கையாளராக
மாற்றுவது எனக்கு
மிகுந்த மகிழ்ச்சி தரும்.
அவரது அணுகுமுறை,
வணிகத்தை
முடிக்கும் லாவகம்,
வார்த்தை விளையாட்டு,
இவைபற்றி எல்லாம்
கூர்ந்து கவனித்து
தெரிந்து கொண்டு
என்னை வளப்படுத்த
ஒரு வாய்ப்பாக
பயன்படுத்திக்கொள்வேன்.
ஒரு முறை இவரது
உறவினர் இல்லத்திற்கு
அழைத்துச்சென்றார்.
அவரும் இவரை
மாமா மாமா என
மனங்குளிர அழைத்து
தடபுடலாக வரவேற்றார்.
கடல் பாசி அல்வா
எல்லாம் கொடுத்து
எங்களை மகிழ்வித்தார்.
காப்பீட்டின் தேவை,
காப்பீட்டின் பலன்
என விவராம
விளக்கிக்கூறினோம்.
சிரித்துக் கொண்டே
எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்டிருந்தவர்
காப்பீடு தனக்கு
தேவை இல்லை என்றும்
தன்னுடம் கொட்டிக்கிடக்கும்
பணமும் சொத்தும்
பல தலைமுறைகளுக்கு
தாராளமாகப் போதும்
என்று அடித்துக் கூறினார்.
ஆனா மூனா அண்ணாச்சி
இவரை காப்பீட்டுத் தத்துவம்
பேசி கரைக்கமுடியாது
என்று தெளிவாக
தெரிந்து கொண்டார்.
நாம் காப்பீடு
செய்துகொள்வதின் மூலம்
நமது பணம்
காப்பீடு செய்து
மரணமடைந்துவிட்ட
முகம் தெரியாத
எண்ணற்ற நபர்களின்
குடும்பத்திற்கு
பலனளிக்கும்.
அதன் மூலம்
பலருக்கும் உதவிய
மனநிறைவு கிடைக்கும்
என்றெல்லாம்
எடுத்துரைத்தார்.
நம்ம ஆளு இந்த
வார்த்தை விளையாட்டுக்கு
எல்லாம் மயங்கவில்லை.
தாங்கள் பல
ஆதரவற்ற குடும்பங்களுக்கு
தங்களின் வருமானத்தில்
ஒரு பகுதியை வழங்கி
மனம் நிறைவுபெறுவதாகக்
கூறினார்.
ஆனா மூனா அண்ணாச்சி
அந்த வீட்டில்
மாட்டப்பட்டிருந்த
விடுதலைப்போராட்ட
வீரர்களின் படங்கள்
அழகாக அலங்கரித்துக்
கொண்டிருப்பதைப்
பார்த்தார்.
எனவே நாட்டுப்பற்றுமூலம்
அவரை வளைக்கலாம் என
நினைத்தார்.
வாடிக்கையாளர்களிடம்
வசூலிக்கும் பணத்தை
எல்ஐசி நிறுவனம்
அரசாங்கத்தின்
நாட்டுநலப்பணிகளில்
முதலீடு செய்வதை
நயம்பட எடுத்துரைத்தார்.
வாய்ப்பாளரோ
மக்கள் நலத்திட்டங்களை
நிறைவேற்ற வேண்டியது
அரசாங்கத்தின் கடமை
அதற்கு தான் எதற்கு
கொடுக்கவேண்டும் என
எதிர்க்கேள்வி கேட்டார்.
ஆனா மூனா
அண்ணாச்சியின் கண்கள்
கோபத்தில் சிவந்தன.
என்னைப்பார்த்து
சார் வாங்க சார் நாம்
போவோம்.
இவன் பணம்
நமக்கும் தேவையில்லை.
நாட்டிற்கும் தேவையில்லை
என்று கூறிவிட்டு அந்த
வாய்ப்பாளரை
கோபத்தோடு
சுட்டெறிப்பதுபோல்
பார்த்தார்.
நாட்டிற்கு நீ
எதுவும் செய்யாமல்
நாடு உனக்குச்
செய்யவேண்டும்
என எதிர் பார்க்கிறாயே..
நீ ஒரு ரோஷமுள்ளவனாக
இருந்தால் நமது ஊரில்
நகராட்சி வழங்கும்
குடிநீரை குடிக்காதே..
குளிக்காதே..
குடிநீர்வசதி வாரியம்
எல்ஐசி யிடம்
கடன் வாங்கிதான்
நகராட்சி ஊருக்கு
குடிநீர் வசதி செய்து
கொடுத்துள்ளது.
இந்த சாலையில்
நாளை முதல்
நடக்காதே..
நான்குசக்கர
வாகனத்தில்
பயணிக்காதே.
அந்த சாலை எங்கள்
எல்ஐசி நிறுவனத்தில்
கடன் வாங்கித்தான்
அரசாங்கம்
அமைத்துக்கொடுத்துள்ளது.
உன் வீட்டில் நாளை முதல்
மின்சாரத்தை
பயன்படுத்தாதே..
குளிர்சாதன வசதியை
பயன்படுத்தாதே..
ஏனென்றால்
மின்சார வாரியம்
எங்கள் நிறுவனத்தில்
கடன் வாங்கித்தான்
உங்களுக்கு மின்சாரம்
விநியோகிக்கிறது.
நீதான் மிகுந்த
ரோஷக்காரனாச்சே..
மாமா சொன்னது போல்
நடந்து காட்டு என்று
கூறிவிட்டு
என் கையைப்பிடித்து
வெளியே வர அழைத்தார்.
ஆனாமூனா
அண்ணாச்சியின்
வேகத்தையும்
கோபத்தையும்
பார்த்து அதிலுள்ள
உண்மையை உணர்ந்த
வாய்ப்பாளர்
வாடிக்கையாளராக
மாறினார்.
உண்மைகளை பிறர்
உணரும்படியாக வார்த்தைகளை
உதிர்த்த அந்த ஆனா மூனா என்ற
உயர்ந்த மனிதரின்
ரசிகராகவே மாறிவிட்டேன்.
அனுபவத்தையும்
முதிர்ச்சியையும்
ஆனா மூனா என
அழைப்பது சரிதானே.
No comments:
Post a Comment