1996-98 கால கட்டத்தில் நான் திருப்பூரில் LIC கிளைமேலாளர்.
ஒரு பாலிசிதாரர் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். பாலிசி எடுத்து ஒரு வருடம்கூட முழுமையாக வில்லை. அது குறித்த விசாரணை என் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சம்மந்தப்பட்ட முகவரை அழைத்துச்செல்லாமல் நானே தனியாகச்சென்றேன். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் என தெரிந்தது.
மன உளைச்சல் காரணமாக ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பாலிசி எடுத்த முதலாவது ஆண்டில் தற்கொலை செய்து கொண்டால் பாலிசிக்குண்டான காப்புத் தொகை பணம் எதுவும் கிடைக்காது.
இதனடிப்படையில் அந்த இறப்பு உரிமம் நிராகரிக்கப்பட்டது. இதனால் முகவருக்கும் வளர்ச்சி அலுவலருக்கும் என் மீது கடுங்கோபம். உண்மையிலேயே அவர்கள் அந்த மரணத்தை ஒரு விபத்து என்றே நம்பினார்கள். அதனால் அவர்கள் என்னை ஒரு வில்லனாக பார்க்கத் தொடங்கினார்கள்.
சில மாதங்களில் வேறு ஒரு இறப்பு உரிமம் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஜனரக்ஷா பாலிசி என்று மிகப் பிரபலமான சிறப்பான திட்டம் ஒன்று அமுலில் இருந்தது. அந்த திட்டத்தில் சேர வயதுச் சான்றிதழோ மருத்துவப் பரிசோதனையோ கட்டாயம் இல்லை. பாலிசி எடுப்பவர் தனக்கு இத்தனை வயதாகிறது என்று ஒரு உறுதி மொழி கொடுத்தாலே போதும். பாலிசி வழங்கப்படும்.
அந்த திட்டத்தில் பாலிசி எடுத்த நபர் தான் இறந்திருக்கிறார். நண்பர்கள் , உறவினர்கள் வட்டாரத்தில் அவர் மணி என்ற பெயரில் பிரபலம். இருபத்தைந்தாயிரம் ரூபாய் காப்புத் தொகைக்கான புதுப் பாலிசி ஒன்றில் சேரும்போது பெயரை மணி என்றே கொடுத்திருக்கிறார்.
திருப்பூர் நகராட்சி வழங்கிய இறப்புச்சான்றிதழில் உண்மை யான பெயரான சந்திரன் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. உரிமம் கோரும் கடிதத்தில் இறந்தவர் பெயர் ஆவணங்களின் படி
சந்திரன் என்றும் அவரை எல்லோரும் செல்லமாக அழைக்கும் மணி என்ற பெயரில் பாலிசி எடுத்திருக்கிறார் என்றும் இருவரும் ஒருவரே என்றும் இறந்துபோனவரின் மனைவி கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து ஆவணங்களும் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவை போன வேகத்திலேயே கிளைக்கு ஒரு குறிப்புடன் திரும்பி வந்திருக்கின்றன. அந்தக் குறிப்பில் திரு A என்பவர் நமது பாலிசிதாரர். திரு B என்பவர் இறந்திருக்கிறார். திரு A அவர்களின் பாலிசி மீதான பணத்தை திரு B அவர்களின் குடும்பத்திற்கு ஒருபோதும் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த தகவல் அந்த நிலையில் தான் என்னுடைய கவனத்திற்கு வளர்ச்சி அலுவலரால் கொண்டு வரப்பட்டது. தகவல் அனைத்தும் உண்மையென்றல் நான் கண்டிப்பாக உதவுகிறேன் என்று அவரிடம் கூறினேன். களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கினேன்.
பாலிசிதாரர் மணி ஒரு வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பாலிசி எடுத்த முதல் ஆண்டுத்துவக்கத்திலேயே இறந்திருக்கிறார். அது ஒரு ஆண்டுத் தவணை பாலிசி. ஒரே ஒரு தவணைதான் செலுத்தப்பட்டு பாலிசி முழு அமுலில் இருந்தது. இறந்தவர் குடும்பம் மிகவும் ஏழ்மையில். மனைவிக்கு அதிகபட்சம் 25 வயதுதான் இருக்கலாம். இரண்டு கைக்குழந்தைகள்.
பெற்றோர்களையும் மீறி சாதி மறுப்புத்திருமணம் செய்திருந்த தம்பதியர். இரண்டு குடும்பங்களின் ஆதரவேதும் இன்றி தனியாக வாழ்ந்தவர்கள். இறந்தவரின் ஆவணப்பெயர் சந்திரன் என்பது முழுக்க உண்மை தான். மணி அவரது செல்லப்பெயர் என்பதும் முழு உண்மை தான். எல்ஐசியை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு துளிக்கூட இல்லை.
எந்த தவறான தகவலையும் அவர் முன்மொழிவுப் படிவத்தில் தரவில்லை. வயதை உறுதிப்படுத்த தரமான சான்று ஒன்று தேவை என்று கேட்கப் பட்டிருந்திருந்தால் உறுதியாக அவர் அதனைக் கொடுத்திருப்பார். சரியான பெயர் அணைத்து ஆவணங்களிலும் பதிவிடப்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட பெயர்க் குழப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை.
இவை பற்றி விளக்கமாக அறிக்கை ஒன்றினைத்தயாரித்து கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி அந்த ஏழைக் குடும்பத்திற்கு காப்பீட்டுப் பணம் கிடைத்திட உதவினேன்.
இதற்கிடையில் காப்புரிமை பணத்திற்கு உரிமை கோரிட இறந்தவரின் பெற்றோர் முயற்சி செய்வதாக தகவல் எனக்கு வந்தது. அவர்களிடமிருந்து ரைவல் கிளைம் கோரிக்கை வருவதற்கு முன்னரே இறந்தவரின் மனைவிக்கு காப்பீட்டுப் பணம் விரைந்து கிடத்திட ஏற்பாடு செய்தேன்.
தலைவனை இழந்து தவித்த அந்த குடும்பத்திற்கு 1996 ல் 25000 ரூபாய் காப்புத் தொகைக்கு விபத்துச் சலுகையுடன் ரூ. 50000 என்பது மிகப்பெரிய வாழ்வாதாரம். இந்த பாலிசியை வழங்கிய வளர்ச்சி அலுவலர் முன்பு என்னை எதிரியாகப்பார்த்த அதே வளர்ச்சி அலுவலர் தான்.
அவரது அணியைச் சேர்ந்த செந்தில் என்ற முகவர் தான் தனது நண்பன் மணியை கட்டாயப்படுத்தி பாலிசி எடுக்க வைத்தவர். இந்த உரிமத்திற்காக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்த்து
வளர்ச்சி அலுவலர் எனது நெருங்கிய நண்பராகிவிட்டார்.
முகவர்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி ஒன்றுண்டு. திருமணத்திற்கு முன்பு சில வாடிக்கையாளர்கள் பாலிசி எடுத்திருப்பார்கள். அம்மாவை நியமனதாரராக நியமித்திருப்பார்கள்.
திருமணம் முடிந்ததும் பாலிசிதாரரே நியமனதாரர் மாற்றம் பற்றி பேசுவதில் அவருக்கு தர்ம சங்கடம் இருக்கும். ஏனென்றால் திருமணம் முடிந்தவுடன் மனைவி பக்கம் சாய்ந்துவிட்டான் என்ற அவப் பெயர் வந்துவிடுமோ என்று தயங்குவார்.
முகவர் முயற்சி எடுத்து பாலிசியின் நியமனதாரரை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தால் பாலிசிதாரருக்கு தர்மசங்கடம் ஏற்படாது. திருமணம் நடந்ததும் பாலிசியில் மனைவியை புது நியமனதாரராக மாற்ற முகவர்கள் நடவடிக்கை எடுத்து அதனை அலுவலகத்தில் காலந்தாழ்த்தாமல் பதிவும் செய்திட வேண்டும்.
“ரைவல்கிளைம்” என்று ஒன்று வந்துவிட்டால் கால தாமதமும் கால விரயமும் ஏற்பட்டுவிடும்.
- பாளை ப.இசக்கிராஜன்
This comment has been removed by the author.
ReplyDelete