ஏல எசக்கின்னு
கூப்புட்டுக்கிட்டே
சேக்காளி சொடல வந்தான்.
என்னய்யா அரசியல்
இப்புடி தரங்கெட்டு
போச்சுன்னு நான்
சொடலகிட்ட கேட்டேன்.
அதிமுகவுல ரெண்டு அணி
மூணு அணின்னு பிரிஞ்சாலும்
ஒத்துமையா "மோடி"காலுல
விளுதானுவொ.
எப்பிடிய்யா
இப்பிடினின்னு கேட்டன்.
அதுக்கு சொடல சொன்னான்
ஏல இது ஒண்ணும் புதுசு இல்ல.
ஏற்கனவே எதிரியாயிருக்குற
ரெண்டு பேரை நமக்கு சாதகமா
வச்சுக்கிறது ஒரு டெக்னிக்.
ஏற்கனவே
ஒத்துமையாயிருக்கவொள
அவங்களுக்குள்ள
சண்டய மூட்டிவிட்டுட்டு
நமக்கு சாதகமா மாத்துறது
இன்னொரு டெக்னிக்.
இதுல்லாம்
ஒனக்கு ஒண்ணும்
புரியாதுலன்னு
சொல்லிட்டே
இந்த ரெண்டாவது டெக்னிக்க
திருச்செந்தூர்ல இருக்கும்போது
தெரிஞ்சுக்குட்டேன் னு சொடல
சொன்னான்.
அந்த ரெண்டாவது டெக்னிக்க
கொஞ்சம் புரியுதமாறி
சொல்லு டேன்னு கேட்டேன்.
எசக்கிக்கு எதயுமே
பூடகமா சொன்னா புரியாது.
புளிபோட்டு தேச்சுதான்
வெளக்கணும்.
சொல்லப்போறத
நல்லா கேளுலன்னுட்டு
திருச்செந்தூர் பெரியசாமி அண்ணாச்சி
பண்ணுன டெக்னிக் ஒண்ணை
சேக்காளி சொடல
சொல்ல ஆரம்பிச்சான்
திருச்செந்தூர்
பெரியசாமி அண்ணாச்சி
சென்னை வில்லிவாக்கத்துல
ஒரு பெரிய வணிக நிறுவனம்
நடத்தி வந்தாரு.
அவருக்கு சொந்த ஊர்ல
ஒரு கட்டடம் கட்டி ஒரு நல்ல
லாட்ஜ் நடத்தணும்ணு ஆசை.
கடலை ஒட்டி
எடம் வாங்கி
ஒரு லாட்ஜ் கட்டுனாரு.
அண்ணாச்சிக்கு
மெட்ராசு கடையையும்
பாக்கணும்.
திருச்செந்தார் லாட்ஜையும்
பாத்துக்கிடணும்.
பையன்மாருகளுக்கு
கொஞ்சவயசுங்கதால
அண்ணாச்சிதான்
எல்லாத்தையும்
கவனிக்கணும்.
அதனால சங்கரன் பிள்ளைன்னு
ஒரு திருச்செந்தூர் காரரை
மேனேஜரா வச்சுக்கிட்டாரு.
சங்கரன்பிள்ளை லாட்ஜை
நல்லா கவனிக்கக்கூடியவருதான்.
நேர்மையாவும் இருக்கக்கூடியவருதான்.
இருந்தாலும் கண்காணிப்புல
வச்சுக்கிடணும்னு
பெரியசாமி அண்ணாச்சி
நெனச்சாரு.
ஆறுமுகம்னு ஒருத்தரு..
லாட்ஜுல சமையல் வேல
பாக்குற சரக்குமாஸ்டர்.
அண்ணாச்சி ஊருக்கு
வந்தார்னா
ஆறுமுகத்துகிட்ட
நல்லா பழகுவாரு.
கோடிக்கணக்குல
பணத்தை போட்டு
பிசுனஸ் பண்ணுததே
ஆறுமொவத்தை
நம்பிதாமுன்னு
அவர்கிட்டயே சொல்லுவாரு.
ஆறுமொவத்துக்கு
அப்டியே உச்சி
குளுந்து போவும்.
அண்ணாச்சி
திருச்செந்தூருக்கு
வந்த போது ஒரு தடவ
ஆறுமொவம் வந்து
அண்ணாச்சிட்ட போயி
"அண்ணாச்சி ஏம்பையன்
படிப்புச்செலவுக்கு
ஒரு ஆயிரம் ரூவாவை
முன்பணம் தாங்க.
சம்பளத்துல
கொஞ்சம் கொஞ்சமா
பிடிச்சுக்குங்க" ன்னு
கேட்டாரு.
அண்ணாச்சி
ஆறுமொவத்துகிட்ட
கவலப்படாதேயும்வே.
நான் ஊருக்கு போவும்போது
சங்கரன்பிள்ளையிட்ட
சொல்லிட்டுபோறன்.
நீரு அவர்ட்ட போயி
நாஞ்சொன்னதா சொல்லி
பணத்தை கேட்டு
வாங்கிக்கிடும் னு
சொல்லிப்புட்டு
சங்கரம்பிள்ளைட்ட
ஒண்ணுஞ்சொல்லாமலேயே
பஸ் ஏறி பட்டணத்துக்கு
பறந்துட்டாரு.
ஆறுமொவம்
சங்கரன்பிள்ளைட்டபோய்
அண்ணாச்சி பணம்
வாங்கிக்க சொன்னாருன்னு
தெனாவெட்டா கேட்டாரு.
சங்கரன்பிள்ளை
ஆறுமொவத்துட்ட
அண்ணாச்சி ஏங்கிட்ட
ஒண்ணுஞ் சொல்லல.
அதனால அவரு
சொல்லாம பணம் தர
என்னால முடியாதுன்னு
மூஞ்சில அடிச்சமாதிரி
சொல்லிட்டாரு.
அந்தகாலத்துல
மொபைல்
வசதியெல்லாம்
கெடயாதுங்கதால
ஆறுமொவத்தால
அண்ணாச்சிட்ட போன்ல
பேசமுடியல.
இருந்தாலும்
பணம் தராத கோவத்துல
சங்கரம்பிள்ளை
என்ன என்ன
பண்ணுதாருன்னு பாத்து
அடுத்ததடவ
அண்ணாச்சி வந்ததும்
பத்தவைக்க நெனச்சாரு.
ஆறுமொவம்
பத்தவச்சுருவாருன்னு
தெரிஞ்ச சங்கரம்பிள்ளையும்
தப்பு ஏதும் பண்ணாம ஒழுங்காஇருந்தாரு.
சங்கரம்பிள்ளையும்.
ஆறுமொவத்தைப்பத்தி
அண்ணாச்சிகிட்ட
பத்தவைக்கதுக்காக
ஆறுமொவத்த நல்லாவே
கண்காணிச்சாரு.
அதுனால ஆறுமொவமும்
ஜாக்கிரதையா நடந்தாரு.
அண்ணாச்சி வச்ச ஆப்பு
ரெண்டுபேருட்டயும்
நல்லாவே வேல செஞ்சுது.
அண்ணாச்சியும்
கவலயில்லாம இருந்தாரு.
பெரியசாமி அண்ணாச்சியின்
இந்த டெக்னிக்
அருமையா யிருக்குல்லா.
இவ்வளவுக்கும்
பெரியசாமி அண்ணாச்சி
மெத்த படிச்ச
மேதாவி இல்லை.
அஞ்சாங்கிளாசையே
அரைகொறையா படிச்சவரு.
ஆனாலும் அனுபவத்துல
எம்.பி.ஏ படிச்சவன விட
மேலானவரு.
இதே மாதிரி தாம்ல இப்பம்
ஒத்துமையா இருந்த
இவங்களுக்குள்ள
நல்லா சண்டய மூட்டி அதுல
நிம்மதியாயிருக்கானுவொ
நம்ம டெல்லி பெரியசாமி
அண்ணாச்சி மாரு.
இப்படி சொடல சொன்னதும்
ஆமாம்யா பெரியசாமி அண்ணாச்சியோட
டெக்னிக் நல்லாவே
தமிழ்நாட்டுல
வேல செய்யுதுன்னு
நாஞ்சொன்னேன்.
சேக்காளி சொடல பயா ஒண்ணொண்ணையும்
நல்லாத்தாம் கவனிக்கான்..
என்னா..
நாஞ்சொல்லுதது
சரிதானா.
No comments:
Post a Comment