Monday, 20 June 2016

மொட்டைக்கடிதம்

மொட்டைக்கடிதம் எழுதுவது கூட ஒரு கலைதானோ?

எனது நண்பர் ஒருவர் 
ஒரு அலுவலகத்தில் அதிகாரி.

உற்சாக பானப்பிரியர். 
உற்சாகபானம்
உள்ளே சென்றுவிட்டால்
அத்துமீறி பேசுவார் .
உடன் இருப்போரை 
உதாசீனப்படுத்தி திட்டுவார். 
கடன் கொடுத்த நண்பர்கள்
கடனை திருப்பிக்கேட்டால்
தரமுடியாது- முடிந்ததை 
பார்த்துக்கொள் என்பார்.
நண்பர்கள் இருக்கும்பகுதிக்கு
இவர் அலுவலகப்பயணம் 
செல்லவேண்டும்.

பயணத்தின்போது பணம்
கைமாத்து கேட்பார். 
உற்சாக பானம் கேட்பார்.
அநாகரிகமாக திட்டுவார்.

நண்பர்கள்
பொறுத்துப்பார்த்தார்கள்.
பொறுமையும் எல்லை மீறியது.
அனைவரும் ஒன்று கூடினார்கள்.
உயர் அலுவலகத்திற்கு 
ஒரு மொட்டைக்கடிதம் எழுத
முடிவாயிற்று.
என்ன என்ன
குற்றச்சாட்டுக்கள் என 
பட்டியலிட்டார்கள்.
மகிழ்ச்சியில்
உற்சாக பானத்தையும் உள்ளே
தள்ளினார்கள்.

கடிதத்தில் குறிப்பிட்ட அலுவலர் பயணம்
வரும்போது பணம் கேட்கிறார்.
கொடுக்காவிட்டால் திட்டுகிறார்.
உற்சாக பானம் வாங்கி 
கொடுக்கவேண்டியுள்ளது.
எனவே இவரை இடம் மாற்றுவதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என
எழுதினார்கள்.

இந்தநேரத்தில் வேறு ஊரிலிருந்து 
சங்கத் தலைவர் ஒருவர்
நண்பர்களைப்பார்க்க வந்தார்.

அவர் மொட்டைக்கடிதத்தை
படித்துப்பார்த்துவிட்டு குற்றச்சாட்டுக்களுக்கு 
வலு சேர்க்க இன்னும் ஒன்றைச்சேர்க்கலாம் 
என்று கூறி ஒவ்வொரு பயணத்தின்போதும்
மதிய உணவிற்கு 
கோழிக்கறியும் ஆட்டுக்கறியும் கட்டாயம்
வேண்டும் என கேட்கிறார் என்ற 
வாசகங்களையும் சேர்த்தார்.
கடிதம் அஞ்சலில அனுப்பப்பட்டது.

நமது அலுவலரும் உயர் அலுவலக 
பொறுப்பாளரும் நல்ல நண்பர்கள்.
உற்சாக பான விருந்துகளில் 
பங்காளிகள். இவரைப்பற்றி
அவருக்கு நன்றாகத்தெரியும்.
சீட்டு விளையாட்டு, உற்சாக பானம் அருந்துதல்
போன்ற தீய பழக்கங்கள் இருந்தாலும்
நம்ம அலுவலர் தீவிர சைவ உணவுக்காரர்.
அசைவ உணவு பக்கம் போகவே மாட்டார்.
அந்த அளவு கட்டுப்பாடு உள்ளவர். இந்த 
தகவல் உயர் அலுவலக
பொறுப்பாளுக்கு நன்றாக தெரியும்.

நண்பர்கள் அனுப்பிய மொட்டைக்கடிதம்
உயர் அலுவலக பொறுப்பாளரின் கனிவான பார்வைக்கு 
வைக்கப்படுகிறது. படித்துப்பார்க்கிறார்.
கடைசிக்குற்றச்சாட்டான "கோழிக்கறி 
ஆட்டுக்கறி" ஐ படித்தவுடன் அவர் இக்கடிதம்
இட்டுக்கட்டியது என கருதி கசக்கி எறிகிறார்.

அந்த கடைசி குற்றச்சாட்டு மட்டும் 
சேர்க்கப்படாமல் இருந்திருந்தால் 
ஒருவேளை இடமாற்றம் இருந்திருக்கும்..

ஒரு தவறான தகவல் பிற உண்மைகளை
மறைத்துவிட்டது.

மொட்டக்கடிதம் எழுதுவது கூட ஒரு கலை தானோ.

No comments:

Post a Comment