Sunday, 8 September 2019

இனிய உளவாக



இனிய உளவாக 

1950, 60 களில் நம் நாட்டில் படிப்பதற்கு வசதி மிகக் குறைவு. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கல்வி நிலையங்கள் இருந்தன. கிடைத்த வாய்ப்புக்களை வசதி படைத்தோர் முழுமையாக பயன் படுத்திக் கொண்டனர். கற்றறிந்து வாழ்க்கையில் ஒளிர் விட்டார்கள். ஆங்கில மொழி மீது அவர்களுக்கு பெரிய மோகம் இருந்தது.
திரை அரங்குகள் புதிதாக முளைக்கத் தொடங்கின. போக்குவரத்துக்கான வழித் தடங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு பேருந்துகள் இறக்கி விடப்பட்டன. படித்த பெரிய இடத்து நபர்கள் இவ்வகைத் தொழிலில் இறங்கி புதிது புதிதாக பல நிறுவனங்களைத் தொடங்கினார்கள்.
அந்த நிறுவனங்களுக்கு நமது வழக்கப்படி பெயர் வைப்பதற்கு முன்னுதாரம் இல்லை. எனவே மேலை நாடுகளில் பெயர் வைக்கும் முறையின் அடிப்படையில் பெயர்களை வைக்கத் தொடங்கினார்கள். அப்போது இருந்த பேருந்து நிறுவனங்களின் சில ஆங்கிலப் பெயர்கள் ரசிக்கும்படி இருந்தன.
பஸ் போக்குவரத்தை முதலில் தொடங்கிய முன்னோடிகள் நாங்கள் தான், என்பதைக் குறிக்கும்படி நாகர்கோவிலில் "Pioneer Bus Service" என்று தொடங்கினார்கள். இது போல் நெல்லையில் Southern Roadways என்ற பெயரிலும், Lion Bus Services என்ற பெயரிலும், Whales என்ற பெயரிலும், தொடங்கினார்கள்.
சிலர் உள்ளூர் பெயரையும் ஆங்கில வார்த்தைகளுடன் சேர்த்து வைத்தார்கள். இப்படித்தான் Sri Ram Popular Service என்ற பெயரில் , ஒரு நிறுவனம் தோன்றியது.
திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று சேலத்தில் தொடங்கப்பட்டபோது, அதற்கு Modern Theatres என்ற ஆங்கிலப் பெயரைத் தான் சூட்டினார்கள். National Pictures, Jupiter Films, என்பது தயாரிப்பு நிறுவனங்கள்.
திரை அரங்குகளுக்குக் கூட ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டன. நெல்லை நகரத்தில், Palace-de-wales, Royal, Popular, Central, என்று சில அரங்குகள். பிற நகரங்களில் Coronation , Thai cinies, Pioneer, Regal , Rainbow, Gaiety, Crown,Wellington, Broadway, Plaza, National, Odeon, Woodlands, என்றும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டி திரை அரங்குகளைக் கட்டினார்கள்.
காலப்போக்கில் தமிழ்ப் பெயர்களுக்கு மாறி வந்தாலும், காலச்சுழற்சியில் திரையரங்குகளுக்கு இப்போது  மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறை வந்து கொண்டு இருக்கின்றன.
அப்போதெல்லாம் அடுக்ககங்கள் என்பது கிடையாது. எல்லாம் தனித் தனி வீடுகள் அல்லது வளவு வீடுகள் தான். வளவு வீடுகள் உரிமையாளர்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. அரண்மனை போன்ற பெரிய பெரிய வீடுகளும் கட்டினார்கள்.
என் வகுப்புத் தோழன் எட்டயபுரத்து வாரிசு திரு விஜயன் அவர்களின் அரண்மனை நெல்லை வீரராகவ புரத்தில் இருக்கிறது. அந்த மாளிகைக்கு Castle Wood என்று பெயர். படிக்கின்ற காலத்தில் அந்தப் பெயர்களுக்குண்டான காரணங்களும், பொருளும் தெரிய வில்லை. சிறிது வளர்ந்த பிறகு தான் அதன் உட் பொருளை எல்லாம் உணர முடிந்தது.
இப்போதும் கூட ஆங்கிலம் மீதுள்ள மோகத்தினால் மக்கள் அடுக்ககங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். சிலர் ஆங்கிலத்தில் இருந்தால் தான்  பெருமை என்று நினைத்து பொருத்தமில்லாத பெயர்களைக் கூட வைக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Enclave, Plaza , Avenue, Nest என்றெல்லாம் பெயரிடுகிறார்கள். Cozy Nest என்பதற்கு வசதியான ஒரு உறைவிடம் என்று பொருள். இந்த பெயர் பொருத்தமானதாக தோன்றுகிறது. பக்கத்தில் சுற்றி இருப்பவர்களைக் காட்டிலும் மாறு பட்டவர்கள் இருக்கும் ஒரு இடம் தான் Enclave எனப்படும். எந்த வகையில் அந்த அடுக்ககத்தில் வசிப்பவர்கள்  மாறுபட்டவர்கள் என்று தான் சொல்லத் தெரியவில்லை.
Plaza என்பதற்கு அங்காடி, அல்லது சந்தை நடக்கக்கூடிய நகரத்தின் திறந்த வெளிப் பகுதி என்று பொருள் கூறுகிறார்கள்.. அடுக்ககத்துக்கு இந்தப் பெயர் எப்படி பொருந்துகிறது என்று தெரியவில்லை. இப்படிப் பல பொருந்தாப் பெயர்களை அடுக்ககத்திற்கு சூட்டியுள்ளனர். நிழற் சாலை என பொருள்படும் Avenue என்ற ஆங்கிலச்சொல், ஓர் அடுக்ககத்திறகு எப்படி பொருந்துகிறது என்று தான் தெரிய வில்லை.
சிறு குழந்தைகளுக்கு இப்போது சூட்டப்படும் பெயர்களில் கூட வடமொழி கலக்கப்பட்டு , ஒரு முறைக்கு பலமுறை கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு தான் அந்த குழந்தைச் செல்வங்களின் பெயரை உச்சரிக்கவே முடிகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல் என்ற குறள் தான் மனதில் வந்து போகிறது.
- பாளை ப.இசக்கிராஜன்.

1 comment: